தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குர்பான் சடங்குக்கான பதிவு தொடங்கியது

2 mins read
71df9a80-016b-4bcd-97ed-9896754a8854
முதல் முறையாக மூன்று வகையான கால்நடைகளின் இறைச்சி இங்கு தருவிக்கப்படவிருக்கின்றன.  - படம்: மதராஸா அல்-மாரிஃப்

ஹஜ்ஜுப் பெருநாள் குர்பான் சடங்குக்கான பதிவு மார்ச் 24ஆம் தேதி தொடங்கியது. முதல் முறையாக மூன்று வகையான கால்நடைகளின் இறைச்சி இங்கு தருவிக்கப்படவிருக்கின்றன.

குர்பான் சடங்கின்போது வெள்ளாடு, செம்மறியாடு போன்ற பண்ணை கால்நடைகள் இறைபலி கொடுக்கப்பட்டு, அவற்றின் இறைச்சி வழிபாட்டாளர்களுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் ஆட்டிறைச்சியைக் கொண்டு நடத்தப்படும் குர்பான் சடங்கை சிங்கப்பூரில் உள்ள 52 பள்ளிவாசல்கள் ஏற்று நடத்தும் என்று சலாம்எஸ்ஜி குர்பான் துணைக் குழு செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) தெரிவித்தது.

2020ல் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூரில் நேரடியாக குர்பான சடங்கு நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஆஸ்திரேலியாவில் குர்பான் சடங்கு நடத்தப்பட்டு உறைய வைக்கப்பட்ட ஆட்டிறைச்சி இங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஆண்டும் தொடர்கிறது.

ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

முதல் முறையாக மூன்று வெவ்வேறு வகையான கால்நடைகளின் இறைச்சி இங்கு வழங்கப்படும். செம்மறியாடு, வெள்ளாடு, மாடு. குர்பான் சடங்குக்கான செம்மறியாடு $360, வெள்ளாடு $375, ஒரு மாட்டிறைச்சியின் ஏழில் ஒரு பங்கு $375 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முழு மாட்டு இறைச்சியின் விலை $2,625.

“சமூகத்தின் கருத்து சேகரிப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது. வெவ்வேறு வகையான கால்நடைகளின் இறைச்சித் தெரிவுகள் கொடுக்கப்படுவதால், சமூகத்தின் எல்லா பிரிவுகளும் அவரவர் வசதிக்கேற்பவும் உணவுக் கட்டுப்பாட்டுக்கேற்பவும் இறைச்சியைத் தேர்வு செய்ய வழி வகுக்கும்,” என்று துணைக் குழு விவரித்தது.

முதலில் வருவோர்க்கு முதற்சலுகை என்ற அடிப்படையில் கால்நடைகளின் இறைச்சியும் சேவைக்கான இடங்களும் வழங்கப்படும் என்றும் பதிவுக்கான இறுதி நாள் ஜூன் 8ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது.

குர்பான் சடங்கில் பங்கேற்போர் இணையத்தில் பதிவு செய்து குர்பான் சடங்குக்கான கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது பங்கேற்கும் பள்ளிவாசலுக்குச் சென்று நேரடியாகப் பதிந்துகொண்டு அதற்கான பணத்தைச் செலுத்தலாம்.

பதிவை வெற்றிகரமாக முடித்து, பணத்தையும் செலுத்தியவர்களுக்கு உறைய வைக்கப்பட்ட இறைச்சி ஜூன் 21ஆம் தேதி முதல் விநியோகிப்படும்.

2024ன் குர்பான சடங்கில் பங்கேற்கும் நியமிக்கப்பட்ட அனைத்து நடத்துநர்களும் சிங்கப்பூர் உணவு அமைப்பின் கடுமையான உணவு பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது உறுதி செய்யப்படும். இறைச்சியை இறக்குமதி செய்யும் இதர அமைப்புகள் அவற்றைச் சேமித்து வைத்தல், விநியோகித்தல் போன்றவற்றை விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்வதும் உறுதி செய்யப்படும்.

வாழ்க்கைத் தர உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், சிறைக் கைதிகளைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் நிலையற்ற தொழிலாளர்களைக் கொண்ட குடும்பங்கள் ஆகியோருக்கு இறைச்சி விநியோகம் கிடைக்கச் செய்வதை துணைக் குழு நோக்கம் கொண்டுள்ளது.

குர்பான் சடங்கில் பங்கேற்கும் பள்ளிவாசல்கள், இறைச்சி தெரிவுகள் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் முஸ்லிம் சமூகத்தினர் https://korban.ourmasjid.sg/ எனும் இணையப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்