சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் உன்னத நோக்கம்

சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் உன்னத நோக்கம்

2 mins read
b672c871-5f21-4c81-bcfa-110a5341f83e
அங்கூலியா பள்ளிவாசலில் தொடங்கிய முயற்சி. - படம்: அனுஷா செல்வமணி
Google News Preferred Icon

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் இந்து அறக்கட்டளை வாரியம் சிங்கப்பூரில் இருக்கும் சில பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கி வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை சிராங்கூன் சாலையில் உள்ள அங்கூலியா பள்ளிவாசலில் தொடங்கி, அதற்குப் பின்னர் அப்துல் கஃபூர், பென்கூலன், ஜாமிஆ சூலியா, பா’அல்வி என இதர நான்கு பள்ளிவாசல்களுக்கும் பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டன.

இந்து அறக்கட்டளை வாரிய நிதி உறுப்பினர் திரு பாலசுப்ரமணியத்திடமிருந்து பேரீச்சம்பழங்களைப் பெற்றுக்கொள்ளும் திரு அப்துல் அஸீஸ் யூசுஃப்.
இந்து அறக்கட்டளை வாரிய நிதி உறுப்பினர் திரு பாலசுப்ரமணியத்திடமிருந்து பேரீச்சம்பழங்களைப் பெற்றுக்கொள்ளும் திரு அப்துல் அஸீஸ் யூசுஃப். - படம்: அனுஷா செல்வமணி

மொத்தம் 600 கிலோகிராம் எடை கொண்ட பேரீச்சம்பழங்கள் ஐந்து பள்ளிவாசல்களுக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டன. பள்ளிவாசல்களுக்கு வரும் முஸ்லிம்கள் நோன்பு துறக்கும்போது அந்தப் பேரீச்சம்பழங்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து அங்கூலியா பள்ளிவாசலின் துணைத் தலைவர் அப்துல் அஸீஸ் யூசுஃப், 52, கூறுகையில், “இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி. இரு சமயங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கும். இரு சமயங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வும் ஒற்றுமையும் வலுப்படுத்தப்படுகிறது. அனைத்து சமயங்களும் ஒற்றுமையாக உள்ளன என்பதற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்றார்.

“இந்த முயற்சி நம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரிய தொண்டாக இருக்கிறது. இந்து அறக்கட்டளை வாரியம் பல ஆண்டு காலமாக மற்ற சமூகத்துடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது. அந்த நோக்கத்தில் பேரீச்சம்பழங்களை வழங்குவதால் சமய ஒற்றுமை வலுப்பெறுகிறது,” என்று இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிதி உறுப்பினரான பாலசுப்ரமணியம், 53, தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம் பெரிதாக வலியுறுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் உன்னத நோக்கம் ஒரு பெரிய மைல்கல். இதுபோல நாங்களும் கோவில்களுக்குச் சென்று உதவி வருகிறோம். எங்களிடையே இருக்கும் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கிறது,” என்று அங்கூலியா பள்ளிவாசலின் தலைமை இமாம் முகமது சர்ஃபூதீன் அப்துல்லா, 55, சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
சமயம்முஸ்லிம்இந்துபள்ளிவாசல்

தொடர்புடைய செய்திகள்