இரு தைவானிய அரசியல்வாதிகளுக்கு ஃபேஸ்புக் மெசஞ்சர் தளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லூ பெங் செங் எனும் அந்த 53 வயது ஆடவர், ஆபத்தை விளைவிக்கும் பொருள் தொடர்பான மிரட்டல் விடுக்கும் நோக்கத்தில் பொய்யான செய்தியை அனுப்பியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
லூ, அந்த மிரட்டல் செய்தியை தைவானின் கோமின்டாங் கட்சியைச் சேர்ந்த திரு லோ சி-சியாங்குக்கும் திரு ஹான் கோ-யுவுக்கும் அனுப்பியதாக நம்பப்படுகிறது.
2024ல் மூன்று நாள்களில் நான்கு முறை அவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை, அது பொய்யான செய்தி என்று தெரிந்திருந்தும் அனுப்பினார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
பிப்ரவரி 28ஆம் தேதி திரு லோவுக்கு அனுப்பிய செய்தியில், “நான் வெடிகுண்டைப் பயன்படுத்தி உன்னை சுக்குநூறாக்குவேன்,” என்று மிரட்டியிருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
திரு லோவுக்கு மீண்டும் மார்ச் 1ஆம் தேதி அனுப்பிய செய்தியில், திரு லோ சி-சியாங், நான் உன் வீட்டை வெடிகுண்டைக் கொண்டு தகர்க்கவுள்ளேன். யுவான் சட்டமன்றக் கட்டடத்தை வெடிகுண்டைக் கொண்டு தகர்க்க என்னிடம் நிறைய வெடிகுண்டுகள் உள்ளன,” என்று கூறியிருந்தார்.
யுவான் கட்டடத்தில்தான் தைவானிய சட்டமன்றம் அமைந்துள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி அந்த ஆடவர் திரு ஹானுக்கு, “ஹான் கோ-யு, உங்கள் காரிலோ வீட்டிலோ வைக்க நான் நிறைய வெடிகுண்டுகளைக் கொண்டு வரப் போகிறேன்,” என்று செய்தி அனுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் பிப்ரவரி 29ஆம் தேதி, “ஹான் கோ-யு, நான் உங்கள் காரில் வெடிகுண்டுகள் வைத்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வெடித்துச் சிதற வைப்பேன்,” என்று செய்தி அனுப்பினார்.
இதன் தொடர்பில் காவல்துறைக்குத் தகவல் அனுப்பப்பட்டு, திரு லூ, மார்ச் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் உள்ள ஒரு பிரபலமான நபர் தமக்கு சிங்கப்பூரிலிருந்து ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்ததை பொதுமக்களில் ஒருவர் பார்த்து அது குறித்து காவல்துறையிடம் தெரிவித்தார் என்று காவல்துறை மார்ச் 25ஆம் தேதி வெளியிட்ட தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
புகார் கொடுக்கப்பட்ட 12 மணி நேரத்துக்ககுள் பிடோக் காவல்துறை பிரிவினர் திரு லூவின் அடையாளத்தை உறுதிசெய்து அவரைக் கைது செய்தனர்.
மருத்துவப் பரிசோதனைக்காக லூ, மனக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் லூவுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை, $500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

