உரிமமின்றி கடன் கொடுக்கும் சேவைகளை விளம்பரப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

உரிமமின்றி கடன் கொடுக்கும் சேவைகளை விளம்பரப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

1 mins read
6f0e9bc9-b5b6-437a-9cfd-c1de386adba8
இடா யூலியாத்தி, 43, உரிமம் இல்லாமல் கடன்கொடுத்த நிறுவனம் ஒன்றுக்கு உதவியதற்காகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.  - படம்: பிக்சாபே

டிக்டாக் கணக்கைப் பயன்படுத்தி, உரிமமின்றி கடன்கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் சேவைகளை விளம்பரப்படுத்திய இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இடா யூலியாத்தி, 43, என்ற அப்பெண் உரிமம் இல்லாமல் கடன்கொடுத்த நிறுவனம் ஒன்றுக்கு உதவியதற்காகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். $30,000 அபராதம் செலுத்துமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவர் கூடுதலாக ஒரு மாதம் சிறையில் இருக்கவேண்டும்.

‘கேஷ்டேங்க் ஃபைனான்சிங் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனத்திடமிருந்து பெற்ற $890 கடனை அவர் திருப்பிச் செலுத்தத் தவறினார்.

இதனையடுத்து, கடன் தொடர்பான விளம்பரங்களை வெளியிட இடா ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவரது முதலாளியிடம் சொல்லிவிடப்போவதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் மிரட்டினார்.

அதனைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடா 20 முறை அந்த விளம்பரங்களை வெளியிட்டார்.

இடாவின் டிக்டாக் கணக்கில் உரிமமின்றி கடன்கொடுக்கும் நடவடிக்கைகள் விளம்பரப்படுத்தப்பட்டதாக காவல்துறையிடம் பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

பிப்ரவரி 28ஆம் தேதி அவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்