தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பண மோசடி விவகாரம்: சந்தேக நபர் மீது மேலும் ஆறு குற்றச்சாட்டுகள்

2 mins read
5fbd2174-1ed6-45c3-b35c-88ab8c50bf8c
வாங் இப்போது மொத்தம் 22 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் இவரே ஆக அதிக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரின் ஆகப் பெரிய பண மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் ஒருவரான வாங் ஷுய்மிங் மீது புதன்கிழமை (மார்ச் 27) மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2022 ஜூலை 19ஆம் தேதி இரு நிறுவனங்களிடம் இருந்து சுவிஸ் தனியார் வங்கி ஒன்றுக்கு போலி நிதி அறிக்கைகளை வாங், 42, சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

புதிய குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்ட அந்த நிதி அறிக்கைகள், 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளுக்கானவை.

வாங் இப்போது மொத்தம் 22 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் இவரே ஆக அதிக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

குற்றப்பத்திரிகையில் துருக்கிய நாட்டவராகக் குறிப்பிடப்பட்டுள்ள வாங், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவரில் ஒருவர். தங்ளின், புக்கிட் தீமா, ஆர்ச்சர்ட் சாலை, செந்தோசா, ரிவர் வேலி என அப்போது சிங்கப்பூர் முழுவதும் பல பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு $3 பில்லியனுக்கும் அதிகம்.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், தம் கட்சிக்காரருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் இப்போது சுமத்தப்படுவதற்கு காரணம் என்ன என்று வாங்கின் வழக்கறிஞர் வெண்டெல் வோங் வினவினார்.

அதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், தாமதத்திற்கு காரணம் எதுவும் இல்லை என்றனர். பிந்தைய விசாரணையில் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தாம் முன்வைக்கப் போவதாக திரு வோங் சொன்னார்.

காணொளி வாயிலாக வாங்கிடம் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பேச திரு வோங் கேட்டுக்கொண்டார். மாவட்ட நீதிபதி ஷான் ஹோ அதற்கு அனுமதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்