என்றுமில்லா அளவு வேலையிட மரணங்கள், காயங்கள் குறைவு: மனிதவள அமைச்சு

என்றுமில்லா அளவு வேலையிட மரணங்கள், காயங்கள் குறைவு: மனிதவள அமைச்சு

2 mins read
தொடர்ந்து அக்கறைக்குரியதாக உள்ள உற்பத்தித் துறை
2657663d-d1ee-47d1-8df5-4ccfaabbd983
2022ஆம் ஆண்டில் 46 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2023ல் 21.7% குறைந்து 36ஆக பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை கண்டிராத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் பதிவானதாக மனிதவள அமைச்சு மார்ச் 27ஆம் தேதி வெளியிட்ட அதன் வருடாந்தர பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பத்தாண்டு காலத்தில் கடுமையான காயம் விளைவித்த சம்பவங்களின் விகிதமும் 2023ல் ஆகக் குறைவாக இருந்ததென தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, 100,000 ஊழியர்களில் ஏறத்தாழ 16 பேருக்கு அவர்களின் வேலையிடத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் வேலையின்போது உயிரிழந்தோர் ஒன்றுக்கும் குறைவு என்றும் அறியப்படுகிறது.

கட்டுமானத் துறையும் போக்குவரத்து, சேமிப்புத் துறையும் வேலையிடச் சம்பவங்கள் தொடர்பான பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவை. அத்துறைகளில் மரணமும் கடுமையான காயமும் விளைவித்த சம்பவங்களின் விகிதம் குறைந்திருந்தது.

இருப்பினும், உற்பத்தித் துறையில் மரணமும் கடுமையான காயமும் விளைவித்த சம்பவங்களின் ஒட்டுமொத்த விகிதங்கள் ஆக அதிகமாக இருந்ததாக அமைச்சு சுட்டியது.

கொவிட்-19 கொள்ளைநோயால் 2020ஆம் ஆண்டில் கணிசமான தடங்கல் ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்கள் வேலையை நிறுத்தும் நிலை நேரிட்டது.

அந்த ஆண்டைத் தவிர 2023ஆம் ஆண்டில்தான் 100,000 ஊழியர்களில் ஒருவருக்கும் குறைவாக வேலையிட உயிரிழப்புச் சம்பவ விகிதம் பதிவானது.

2023ல் 36 ஊழியர்கள் வேலையிடச் சம்பவங்களில் உயிரிழந்தனர். இது 2022ஆம் ஆண்டின் 46 உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில் 21.7% சரிவு.

அதனால், 100,000 ஊழியர்களில் வேலையிட உயிரிழப்பு தொடர்பான விகிதம் 2022ல் 1.3ஆக இருந்து 2023ஆம் ஆண்டில் 0.99ஆக பதிவானது.

ஒன்றுக்கும் குறைவான விகிதம் பதிவாக வேண்டும் என்பதை, 2028ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டிய இலக்காக சிங்கப்பூர் கொண்டிருந்தது.

இந்த இலக்கை இதுவரை நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே தொடர்ந்து எட்டிவருகிறது.

உயிரைப் பறிக்காத, கடுமையான காயங்கள் விளைவித்த சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் 590. இது 2022ல் பதிவான 614ஐ விட குறைவு.

கட்டுமானத் துறையில் கடந்த 2023ல் ஆக அதிகமான உயிரிழப்புகள் நேர்ந்தன.

இதற்கிடையே, உற்பத்தித் துறையில் உயிரிழப்புச் சம்பவங்கள் ஏழிலிருந்து ஐந்தாகக் குறைந்தபோதும், கடுமையான காயங்கள் விளைவித்த சம்பவங்கள் 122லிருந்து 150ஆக அதிகரித்தன.

இந்நிலையில், வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்த 2024ஆம் ஆண்டில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
உயிரிழப்புஊழியர்கள்காயம்மனிதவள அமைச்சுகட்டுமானத் துறைஉற்பத்தி