மண்டாயில் உள்ள உள்துறைக் குழு செயலாக்க நிலையத்தில் காவல்துறை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, பயங்கரவாத சூழ்நிலைகளைக் கையாளும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆளில்லா வானூர்திகள் எவ்வாறு நிகழ்நேர தெளிவான படங்களை வழங்குகின்றன என்பது செய்து காட்டப்பட்டது.
கடந்த ஆண்டிலிருந்து காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியத்தால் ஆளில்லா வானூர்திகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆளில்லா வானூர்திகளால் பதிவுசெய்யப்படும் படங்களைச் சிறப்புக் கண்ணாடிகள் வழியாக பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க ஊடகத்தினர் அந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 4கே தொழில்நுட்பத்தில் நிகழ்நேரத்தில் வெளியிடப்படும் படங்களில் மக்களையோ பொருள்களையோ செய்தியாளர்களால் பார்க்க முடிந்தது.
பொது ஒழுங்கு சம்பவங்களைக் கையாளும் காவல்துறை செயலாக்கப் பிரிவு, பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளையும் சமாளிக்கிறது. ஆயுமேந்திய குற்றவாளிகளைத் தேடுவது, பயங்கரவாதத் தாக்குதல்களைச் சமாளிப்பது உள்ளிட்டவை அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
அண்மையில் நடந்த இரு சம்பவங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டின.
மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் துப்பாக்கிக்காரர்கள் நால்வர் மார்ச் 23ஆம் தேதி நடத்திய ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில் 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பேங்காக்கின் சியாம் பேரகான் கடைத்தொகுதியில் 14 வயதுச் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்; ஐவர் காயமுற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
உருமாறிவரும் மிரட்டல்களுக்குப் பதில் நடவடிக்கையாக தொழில்நுட்பப் பயன்பாடு இடம்பெறுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் யூஜின் வீ கூறினார்.
ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடு, அதிகாரிகளுக்கு ஏற்படும் இடர்களைக் குறைப்பதாக அவர் சொன்னார். சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியத்திடம் ஐந்து வானூர்திகள் உள்ளன. அவற்றின் எடை 350 கிராமும் 7 கிலோகிராமுக்கும் இடைப்பட்டவை.

