தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றக் கும்பல்கள் மிக வேகமாகப் பரவும் அபாயம்: இன்டர்போல் எச்சரிக்கை

2 mins read
50fc621d-36e2-491c-a501-da47fb7894d4
இன்டர்போல் தலைமைச் செயலாளர் யர்கன் ஸ்டோக். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குற்றக் கும்பல்கள் மிக வேகமாகப் பரவும் அபாயம் நிலவுவதாக அனைத்துலகக் காவல்துறை அமைப்பின் (இன்டர்போல்) தலைமைச் செயலாளர் யர்கன் ஸ்டோக் எச்சரித்துள்ளார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு புதன்கிழமை (மார்ச் 27) அவர் அளித்த பேட்டியில், எல்லை தாண்டிய குற்றக் கும்பல்கள் விடுக்கும் மிரட்டல் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகளை இன்டர்போல் எச்சரித்து வருவதாகக் கூறினார்.

அண்மைய மாதங்களில் எக்குவடோரும் ஹெய்ட்டியும் குற்றக் கும்பல்கள் விடுக்கும் மிரட்டலுக்கு இலக்காகியுள்ளன.

குண்டர் கும்பல் பிரச்சினைகள் நிறைந்த தென்னமெரிக்க நாடான எக்குவடோரில் கடந்த ஆண்டு 7,872 கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. அந்நாட்டின் வரலாற்றிலேயே அது ஆக அதிக எண்ணிக்கையாகும்.

அதேவேளையில், ஹெய்ட்டி தலைநகர் தற்போது குற்றக் கும்பல்களால் நடத்தப்படுகிறது.

வடஐரோப்பாவில் உள்ள பல்வேற்று நகர்களில், குறிப்பாக துறைமுகங்களுக்கு அருகே உள்ளவற்றில் குற்றக் கும்பல்களால் வன்முறையும் ஊழலும் அதிகரித்துள்ளதாக திரு ஸ்டோக் தெரிவித்தார். அத்தகைய கும்பல்கள் போதைப்பொருள்களையும் சட்டவிரோத பொருள்களையும் அங்கு கொன்டு செல்கின்றன.

“இன்டர்போல் தலைமைச் செயலாளராக 10 ஆண்டுகள் உட்பட காவல்துறை அதிகாரியாக 45 ஆண்டுகால அனுபவமுள்ள நான், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் பரவக்கூடிய அபாயம் குறித்து உலகை எச்சரிக்கும் எனது முடிவை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது,” என்று திரு ஸ்டோக் வலியுறுத்தினார்.

இத்தகைய குற்றக் கும்பல்கள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்த்திராத அளவில் இப்போது செயல்படுவதாக அவர் சொன்னார்.

பிரான்சின் லியோன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இன்டர்போல், எல்லை தாண்டிய குற்றக் கும்பல்களால் விடுக்கப்படும் மிரட்டல் குறித்த அறிக்கை ஒன்றை நிறைவுசெய்யும் கட்டத்தில் உள்ளது.

மொத்தம் 196 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள இன்டர்போலுக்கு அதிக கவலைதரும் 10 கும்பல்களை அந்த அறிக்கை பட்டியலிடும்.

எல்லை தாண்டிய ஒருங்கிணைந்த குற்றச் செயல்கள், முக்கிய உலகளாவிய பாதுகாப்பு மிரட்டலாக உருவெடுத்திருப்பதாக திரு ஸ்டோக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்