சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை, அதன் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து, இந்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களுக்கான கருப்பொருளும், சின்னமும் மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இதனைக் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சரும், வர்த்தக, தொழில், துணை அமைச்சருமான ஆல்வின் டான், தற்காப்பு, மனிதவள அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான நீல் பரேக் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ‘அடுத்த நூற்றாண்டுக்கான முன்னேற்றம்: சிங்கப்பூர் இந்திய வர்த்தகச் சமூகத்தில் மின்னிலக்கப் பயன்பாட்டின் விரிவாக்கம், நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்தல்’ எனும் கருப்பொருளும், இந்த வர்த்தக, தொழிற்சபையின் மரபு, அது இந்திய வர்த்தகர்களுக்கு அளிக்கும் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களை நினைவூட்டும் வகையில் சின்னமும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய வர்த்தக, தொழிற்சபை நூற்றாண்டைக் கொண்டாடுவது பெருமைக்குரியது என்றார் அதன் தலைவர் நீல் பரேக். சிங்கப்பூரில், சிறு வணிகங்கள் அனைத்துலகமயமாதலுக்குப் பல்வேறு வகையிலும் ஆதரவு கிடைப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அவற்றை இந்திய சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் பயன்படுத்தி முன்னேற இச்சபை உதவும் எனவும் தெரிவித்தார்.
மேலும், “நீடித்த நிலைத்தன்மையை நடைமுறைப்படுத்துவதும், மின்னிலக்கப் பயன்பாட்டை விரிவடையச் செய்வதும் எங்கள் இலக்கு. அதனை அனைவரும் இணைந்து சாத்தியப்படுத்துவோம் எனும் நம்பிக்கை உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
நூற்றாண்டை முன்னிட்டு ஆண்டு முழுதும் சிறு நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மின்னிலக்கமயமாதலுக்கும், அனைத்துலகமயமாதலுக்கும் ஆதரவளிக்கவும், பயிலரங்குகளும், கருத்தரங்குகளும், அமர்வுகளும் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டார் சபையின் இயக்குநர் ஜெயந்தி மணியன்.
சிங்கப்பூர் இந்திய நிறுவனங்களின் சேவை, புத்தாக்கம் உள்ளிட்டவற்றைப் பாராட்டவும், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும் ஐந்து வெவ்வேறு அடிப்படைகளில் நூற்றாண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார்.
மேலும், இளைய தலைமுறையினரை இச்சபைக்குள் கொண்டுவரவும், அவர்களை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தவும் விரும்புவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தொழிற்சபை பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, லிட்டில் இந்தியாவில் உள்ள தொழில்கள் உள்பட பல சிறு தொழில்களை உள்ளடக்கியுள்ளதைப் பெருமையுடன் பகிர்ந்தார் லிஷா அமைப்பின் ஆலோசகரும், இத்தொழிற்சபையில் சிறு நிறுவனங்களைப் பிரதிநிதிப்பவருமான ராஜகுமார் சந்திரா. இதனால் அந்நிறுவனங்களுக்கு உரிய ஆதரவும் அங்கீகாரமும் கிடைப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, வர்த்தகங்கள் உலகமயமாகிவரும் நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழில் வாய்ப்புகளை அறிய இச்சபை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் அவர் சொன்னார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள இந்திய வர்த்தகர்களுடன் இணைந்து தொழில் செய்ய விரும்பும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு இச்சபை ஒரு தொடர்புக் கருவியாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.
இக்கொண்டாட்டத்தில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முயற்சிகளின் ஒரு பகுதியாக, இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜூரோங் லேக் கார்டன்ஸில் மரம் நடும் விழா நடத்தப்பட்டதோடு, இச்சபையின் ‘பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின்’ மூலம், 100,000 வெள்ளி ‘கார்டன் சிட்டி நிதி’க்காகத் திரட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.