சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் வாகனங்களில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண (இஆர்பி) சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும்.
அதேநேரம் மோட்டார் சைக்கிள்களில் தற்போது உள்ள இஆர்பி சாதனம் மாற்றப்படுவதன் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்களுக்கு படிப்படியாகத் தெரிவிக்கப்படும்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் மோட்டார் சைக்கிள்களில் புதிய இஆர்பி சாதனத்தைப் பொருத்துவது ஜூன் 1 முதல் தொடங்கும்.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் இரண்டு மாத காலத்திற்குள் புதிய சாதனத்தைப் பொருத்தினால் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் அதற்காகக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டி இருக்காது.
இந்தக் காலவரையறைக்கு அப்பால் இஆர்பி சாதனத்தைப் பொருத்த $35 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
புதிய இஆர்பி சாதனம் தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 28) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
மோட்டார் சைக்கிள்கள் தவிர்த்து, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார்கள் மற்றும் லாரிகளில் புதிய சாதனத்தைப் பொருத்த முன்பதிவு செய்வது குறித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து கட்டம் கட்டமாகத் தெரிவிக்கப்படும் என்றது ஆணையம்.
2023 நவம்பர் முதல் 13,000க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதிய இஆர்பி சாதனம் பொருத்தப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
புதிய சாதனத்தைப் பொருத்தும் நடவடிக்கை அப்போதுதான் தொடங்கியது.
இந்த எண்ணிக்கையில் பொதுப் பேருந்துகளும் வர்த்தக வாகனங்களும் அடங்கும்.
புதிய சாதனம், மோட்டார் சைக்கிள்களின் கைப்பிடி கம்பியில் பொருத்தும் அளவுக்கு ஒற்றை சாதனமாக இருக்கும்.
அதே நேரம் கார்கள் போன்ற இதர வாகனங்களுக்கு மூன்று பகுதிகளைக் கொண்டதாக அந்தச் சாதனம் இருக்கும்.
வானலை வாங்கி (ஆன்டனா), அட்டை விவர வாசிப்புடன் கூடிய செயலாக்கக் கருவி, தொடுதிரை ஆகியன அந்த மூன்று பகுதிகள்.
புதிய சாதனத்தைப் பொருத்துவது குறித்து கடிதம், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக வாகன உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
அதனைப் பொருத்துவதற்கான முன்பதிவை இணையத்தில் செய்வதற்கும் தங்களுக்கு விருப்பமான வாகனப் பட்டறையை தேர்வு செய்வதற்கும் ஏதுவாக இணைப்பு ஒன்று அந்தத் தகவலுடன் வழங்கப்படும்.
புதிய சாதனத்தில் தொடுதிரை வேண்டுமா என்பது குறித்த தெரிவையும் அப்போது அவர்கள் தெரிவிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.

