சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.5 டன் காய்கறி, உணவு பறிமுதல்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.5 டன் காய்கறி, உணவு பறிமுதல்

1 mins read
a5c47600-7ed2-4339-96ce-69bbdc54443b
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட  வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு
Google News Preferred Icon

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.5 டன் காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சிங்கப்பூர் உணவு அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் உணவு அமைப்பும் இணைந்து இந்த கூட்டு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தன.

மார்ச் 25, 26 ஆகிய நாள்களில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக வரும் காய்கறி சரக்கு வாகனங்களைக் குறிவைத்து சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின்போது இரண்டு சரக்கு வாகனங்களில் உள்ள பொருள்களுக்கு தகுந்த ஒப்புதல்கள் இல்லை என்பதை அதிகாரிகள் அறிந்தனர்.

அதன் பின்னர் நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 1.5 டன் உணவுப்பொருள்கள் அதிகாரிகளிடம் அறிவிக்கப்படாமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

ஊசி மிளகாய், வெங்காயம், கத்தரிக்காய், பூண்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை இரண்டு வாகனங்களில் மூன்று இறக்குமதியாளர்கள் அனுமதியில்லாமல் சிங்கப்பூருக்குள் கொண்டுவந்தனர்.

சிங்கப்பூரில் உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே காய்கறிகள், பழங்களை இறக்குமதி செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் இறக்குமதி செய்யும் போது தகுந்த ஒப்புதல்களை அவர்கள் பெற வேண்டும்.

காய்கறி, பழங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்பவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சட்டவிரோதம்இறக்குமதி