கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்துக்கு மான்செஸ்டர் பேருந்து சேவை குத்தகை

1 mins read
874d58d8-9726-49c7-81d0-3c795c930ae6
கம்ஃபர்ட்டெல்குரோவின் துணை நிறுவனமான மெட்ரோலைன் புதிய ஏலக்குத்தகையைப் பெற்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரிட்டனின் மான்செஸ்டர் பெருநகரில் பொதுப் பேருந்து சேவை நடத்துவதற்கான ஏலக்குத்தகையை கம்ஃபர்ட்டெல்குரோ பெற்றுள்ளது.

ஐந்தாண்டு காலத்திற்கான அந்தக் குத்தகையின் மதிப்பு 422 மில்லியன் பவுண்ட்ஸ் (S$719 மில்லியன்).

கம்ஃபர்ட்டெல்குரோவின் துணை நிறுவனமான மெட்ரோலைன், கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஹைட் ரோடு, ஷர்ஸ்டன், டேம்ஸைட் போன்ற பகுதிகளில் பேருந்துகளை இயக்கும்.

இதற்கான ஏலக்குத்தகையை மான்செஸ்டர் பெருநகர ஒருங்கிணைந்த ஆணையம் வழங்கி உள்ளது.

இந்தக் குத்தகையின்கீழ், 232 பேருந்து சேவைகளை மெட்ரோலைன் ஏற்று நடத்தும். அதற்கு 420 பேருந்துகளையும் 1,350க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் அந்நிறுவனம் பயன்படுத்தும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ வியாழக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தது.

லண்டன் பெருநகரத்திலும் உலகின் பல பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையில் தமது குழுமம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக கம்ஃபர்ட்டெல்குரோ குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான செங் சியக் கியன் கூறினார்.

இதுபோன்ற உலக அளவிலான குத்தகைகளைப் பெறும் அளவுக்கு தமது குழுமம் நல்லநிலையில் இருப்பதையே இச்சாதனை உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.

கம்ஃபர்ட்டெல்குரோ, மெட்ரோலைன் நிறுவனத்திற்குட்பட்ட பிரேடல் லிமிடெட் ஆகியவற்றின் தலைவரான மார்க் கிரீவ்ஸ் கூறுகையில், “இந்த ஏலக்குத்தகை எங்களது அடிப்படைப் போக்குவரத்து முறையை உத்திபூர்வமாக வளர்ப்பது, அதனை வலுப்படுத்த விரிவான உத்தியை வகுப்பது ஆகியவற்ளைப் பொருத்தது,” என்றார்.

மெட்ரோலைன் தற்போது லண்டனின் நான்காவது பெரிய பேருந்து நிறுவனம் ஆகும். அந்த நகரில் இயங்கும் பேருந்துச் சேவைகளில் 17 விழுக்காடு இந்த நிறுவனத்தைச் சேர்ந்தது.

குறிப்புச் சொற்கள்