தொழில்நுட்ப உதவி மோசடி: பெண் உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை

தொழில்நுட்ப உதவி மோசடி: பெண் உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை

2 mins read
0f383945-eb91-40b0-a07c-a7bff922e26c
பிடிபட்ட ஒன்பது பேரும் 32 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். - கோப்புப் படம்: சாவ்பாவ்

தொழில்நுட்ப உதவி வழங்குவதாகக் கூறி நடைபெற்ற மோசடியில் சிக்கி $6.7 மில்லியனை பொதுமக்கள் இழந்துள்ளனர்.

இந்தப் புதுவித மோசடி தொடர்பாக ஒன்பது பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களில் ஒருவர் பெண்.

மைக்ரோசாஃப்ட் அல்லது ஆப்பிள் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப உதவி ஊழியர்கள் என்று அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 29) தெரிவித்தது.

பல்வேறு அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து நடத்திய வேட்டையில் அந்த ஒன்பது பேரும் பிடிபட்டனர். அவர்கள் 32 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளுடன் ஏழு காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து மார்ச் 25ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை அந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவ்வாண்டு தொடங்கியது முதல் தொழில்நுட்ப உதவி மோசடிகள் குறித்து குறைந்தபட்சம் 78 புகார்கள் வரப்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் மின்னிலக்க சாதனம் பழுதாகிவிட்டதாக அவர்களின் கணினி அல்லது மடிக்கணினிகளுக்கு திடீரென்று ஒரு தகவல் வரும்.

அதனை சரிசெய்ய தொழில்நுட்ப உதவியாளர்களை நாடுமாறு குறிப்பிட்டு அதற்கான தொடர்பு எண்ணும் அந்தத் தகவலில் இடம்பெற்று இருக்கும்.

தொலைதூரத்தில் இருந்து தொழில்நுட்ப உதவியாளர்கள் பழுதுநீக்குவார்கள் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கும்.

அந்த எண்ணைத் தொடர்புகொண்டதும் அரசாங்க சட்ட அமலாக்க அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஒருவர் தொடர்பில் இணைவார்.

கணினி அல்லது மடிக்கணினிக்குள் நுழைந்து சோதனை செய்த பின்னர், கணினி ஊடுருவப்பட்டுள்ளதாகவும் காவல்துறையில் அது குறித்து புகார் செய்ய வேண்டும் என்றும் கூறி கணினி உரிமையாளரின் வங்கிக் கணக்கு விவரங்களை அவர் கேட்பார்.

விவரங்களைத் தந்ததும் பணம் எடுக்கப்பட்டு மோசடி அரங்கேறிவிடும்.

இதனை விளக்கிய காவல்துறை, பொதுமக்கள் விழிப்புடன் நடந்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உள்ளது.

குறிப்புச் சொற்கள்