தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்ஐவியுடன் இருப்போரில் 85% நிலைமையை அறிந்துள்ளனர்: சுகாதார அமைச்சு

2 mins read
4f520e08-a24a-4b29-9798-24545c2cc7da
எச்ஐவி பாதிப்பை உணரும் விகிதத்தை 2025ஆம் ஆண்டு 95 விழுக்காடாக உயர்த்த ஐநா திட்டம் வகுத்துள்ளது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் சிங்கப்பூர் அண்மையில் மாற்றம் செய்தது. எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பவர் அதுகுறித்து தமது பாலியல் துணைக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியத்தை நீக்கியதே அந்த மாற்றம்.

நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குலைக்கும் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டோர், குறைந்தது ஆறு மாதங்களுக்கு பரிசோதனையில் கண்டுபிடிக்க இயலாத அளவு மிகக் குறைவான கிருமியைக் கொண்டிருந்தால் அவர்கள் பாலியல் உறவு கொள்வோரிடம் தங்கள் நோய் பற்றி இனிமேல் தெரிவிக்க வேண்டியதில்லை.

அந்த சட்ட மாற்றம், எச்ஐவி ஒரு பொது சுகாதார அச்சுறுத்தல் என்பதற்கு முடிவுகட்ட உலகம் வகுத்துள்ள இலக்கை அடைய சிங்கப்பூருக்கு உதவும் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மார்ச் 7ஆம் தேதி தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

எச்ஐவி கிருமியுடன் வாழ்பவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்ளவும் சிகிச்சையைத் தொடங்கவும் அந்த சட்டத்திருத்தம் ஊக்குவிக்கக்கூடும் என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் எச்ஐவி திட்டத்தின் இயக்குநரான உதவிப் பேராசிரியர் டேரியஸ் பியோட் ஒல்சைனா தெரிவித்து உள்ளார்.

எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐநா இணைப்புத் திட்டம் 95-95-95 என்னும் இலக்கை 2025ஆம் ஆண்டுக்கு வகுத்துள்ளது.

எச்ஐவியுடன் வசிப்பவர்களில் 95 விழுக்காட்டினர் பாதிப்பின் நிலையை அறிந்துகொள்ளும் நிலையை உருவாக்குவது, 95 விழுக்காட்டினர் சிகிச்சைக்குச் செல்வதை ஊக்குவிப்பது, சிகிச்சை பெறுவோரில் 95 விழுக்காட்டினரிடம் எச்ஐவி கிருமி பாதிப்பை அகற்றுவது என்பதே அந்த 95-95-95 இலக்கு.

தற்போது அந்த இலக்கை உலகம் நெருங்குகிறது. அதற்கு அடையாளமாக, எச்ஐவியுடன் வாழ்பவர்களில் 85 விழுக்காட்டினர் தங்களுக்கு அந்தக் கிருமி பாதிப்பு இருப்பதை அறிந்துள்ளனர் என்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

அவ்வாறு உணர்ந்துள்ளோரில் 94 விழுக்காட்டினர் எச்ஐவி கிருமி பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். சிகிச்சை எடுப்போரில் 94 விழுக்காட்டினரின் கிருமி பாதிப்பு தணிந்துள்ளது என்று கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்பாக, 2025ஆம் ஆண்டுக்கான ஐநாவின் எய்ட்ஸ் இலக்கை எட்ட சிங்கப்பூருக்கு இருக்கும் முக்கிய சவால், எச்ஐவியுடன் வாழ்பவர்களில் அதிகமானோரை பரிசோதனைக்குச் செல்ல ஊக்குவிப்பது.

சட்டத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றம் அதனை ஊக்குவிக்கும் என்று சா சுவீ ஹாக் பொது சுகாதாரப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் ராய்னர் டான் கூறியுள்ளார்.

நடப்பில் உள்ள சட்டத்தால், எச்ஐவிக்கு ஆளாகக்கூடியவர்கள் பரிசோதனை செய்துகொள்ள அஞ்சுவதாக தமது ஆராய்ச்சி கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.

தற்போது விதிவிலக்குடன் செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்தம், எச்ஐவி பரிசோதனைக்கும் அது தொடர்பான சிகிச்சைக்கும் அதிகமானோர் செல்ல ஊக்குவிக்கும்.

ஒவ்வொருவரும் இவ்வாறு செய்தால் எச்ஐவி பரவாமலும் புதிய எச்ஐவி பாதிப்பு ஏற்டாமலும் ஆக்கலாம் என்றார் பேராசிரியர் டான்.

குறிப்புச் சொற்கள்