ஜூன் 25ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் புரூம் நகருக்கு ஜெட்ஸ்டார் ஏஷியா நேரடி விமானச் சேவையை வழங்குகிறது.
பருவ அடிப்படையில் இந்த விமானச் சேவையை ஜெட்ஸ்டார் ஏஷியா விமான நிறுவனம் வாரத்துக்கு இருமுறை வழங்கும் என்று மார்ச் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 25லிருந்து அக்டோபர் 26ஆம் தேதி வரை புரூம் நகருக்கு ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை வழங்குகிறது. பிறகு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூருக்கும் புரூம் நகருக்கும் இடையிலான விமானச் சேவையை அது தொடரும்.
மேற்கு ஆஸ்திரேலியத் தலைநகர் பெர்த்துக்கு வடக்குப் பகுதியில் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் புரூம் நகரம் உள்ளது.
சிங்கப்பூருக்கும் புரூம் நகருக்கும் இடையிலான பயண நேரம் ஏறத்தாழ நான்கரை மணி நேரம்.
தற்போது சிங்கப்பூரிலிருந்து புரூம் நகருக்கு செல்ல ஒருவழிப் பயணச் சீட்டுகளின் தள்ளுபடி விலை கிட்டத்தட்ட S$115. இந்தத் தள்ளுபடி விலைப் பயணச் சீட்டுகளை, அவை இருப்பில் உள்ள வரை ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் இணையப்பக்கத்துக்குச் சென்று வாங்கலாம். அவற்றை வாங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 2ஆம் தேதி.