உரிமம் பெறாத கடன் வழங்கும் கும்பலின் தலைவரைக் காவல்துறை அடையாளம் கண்டது. ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்து இயங்கினார். அவருக்கு எதிராக ஆதாரம் வழங்கக் கூடியவர்கள், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அஞ்சினர்.
குற்றவியல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட வேண்டியிருந்தது.
அப்பிரிவின் உரிமம் பெறாத கடன் வழங்கும் கும்பலை எதிர்க்கும் படையைச் சேர்ந்த காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஆல்வின் லி, சமூக ஊடகம் மற்றும் கைப்பேசிச் செயலிகளில் கடன் வழங்கும் அளவுக்கு சட்டவிரோத சேவை உருவெடுத்ததாகக் கூறினார்.
ஆனால், கடன் பெற்றவர்களை அச்சுறுத்தும் பழைய உத்திகள் தொடர்ந்தன. கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் கடும் தொல்லையை எதிர்நோக்கினர்.
கும்பல் தலைவரைக் காவல்துறை அடையாளம் கண்டபோது, அவரைப் பிடிக்க குற்றவியல் சட்டத்தை (தற்காலிகச் சட்டம்) பயன்படுத்த முடிவெடுத்ததாக டிஎஸ்பி லி சொன்னார்.
அச்சட்டம், கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரங்களில் விசாரணை கோராமல் ஒருவரைத் தடுத்து வைக்க உள்துறை அமைச்சருக்கு அதிகாரம் வழங்குகிறது.
பொதுப் பாதுகாப்பு, அமைதி, நல்ல ஒழுங்கு ஆகியவற்றின் நலன் கருதி ஒருவரைத் தடுத்துவைக்க அல்லது மேற்பார்வையிட அமைச்சர் எடுத்துள்ள முடிவு இறுதியானது என்று இந்தச் சட்டம் 2018ல் ஒரு பிரிவுடன் திருத்தப்பட்டது.
இதுவும் சட்டத்தில் செய்யப்பட்ட இதர மாற்றங்களும் நாடாளுமன்றத்தில் நான்கு மணி நேர விவாதத்தைத் தூண்டின.
தொடர்புடைய செய்திகள்
இந்த மாற்றங்களை எதிர்த்த பாட்டாளிக் கட்சி, “இறுதிநிலை சட்டப்பிரிவு” நீதித்துறை விசாரணையை மட்டுப்படுத்துகிறது என்று வாதிட்டது. ஏனெனில், வழக்கின் உண்மைகளை விசாரிப்பதில் இருந்து நீதிபதிகளை அது தடுத்து நிறுத்துவதாக அக்கட்சி கூறியது.
அச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, அதில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி குற்றவாளிகளுக்கு எதிரான “கடைசி முயற்சியாக” அச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக டிஎஸ்பி லி சொன்னார்.

