எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வேலை தேடித் தர உதவி

2 mins read
6a696e3f-e46b-49cc-b3b4-9ea77e8dd207
2023ஆம் ஆண்டில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களில் 409 பேருக்கு வேலை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்களில் 81 விழுக்காட்டினருக்கு (333 பேர்) வேலை கிடைத்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வசிப்பிடம் இல்லாது பொது இடங்களில் படுத்து தூங்குவோர், மனநலப் பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வேலை தேடித் தர சில அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

இந்த நோக்கத்துக்காக 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளன அறநிறுவனம், சிங்கப்பூர் மனிதவளக் கழகம், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகம், சிங்கப்பூர் பந்தயப்பிடிப்புக் கழகம் ஆகியவை இடையே பங்காளித்துவம் உருவானது.

2023ஆம் ஆண்டில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களில் 409 பேருக்கு வேலை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அவர்களில் 81 விழுக்காட்டினருக்கு (333 பேர்) வேலை கிடைத்தது.

எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் வீடு இல்லாமல் பொது இடங்களில் படுத்துத் தூங்குபவர்களும் குறைந்த வருமானம் ஈட்டும் தனிநபர்களும் அடங்குவர்.

வேலை தேட உதவி நாடியோரில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் பெண்கள். அவர்களில் ஒற்றைப் பெற்றோரும் அடங்குவர்.

சிங்கப்பூர் வர்த்தக சம்மேளன அறநிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நியூ ஹோப் சிஎஸ் எனும் சமூக சேவை அமைப்பு, வசிப்பிடம் இல்லாத தனிநபர்களுக்கு வேலை தேடித் தரவும் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் தேவையான ஆதரவைத் தருகிறது.

இத்திட்டத்தின் பயிற்றுவிப்பாளர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குப் பயிற்சி, திறன் மேம்பாடு வழங்குவதுடன் பொருத்தமான வேலையை அடையாளம் கண்டு அவர்களை அதில் சேர்த்துவிடவும் உதவுகின்றனர்.

மனிதவள நிபுணர்கள், முதலாளிகள், சமூக சேவை அமைப்புகள் ஆகியவற்றுடனான கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும் சிங்கப்பூர் வர்த்தக சம்மேளன அறநிறுவனம் தெரிவித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 220க்கும் அதிகமான புதிய முதலாளிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர்களில் 160 பேர் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பணியமர்த்தியதாகவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்