சீனாவின் ஹங்சோவ் நகரில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான போட்டிகளில் கலந்துகொள்ள மூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட லயனல் டோ சென்றிருந்தார்.
அங்கு அவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மற்றொரு திடல்தட வீரருடன் மோத நேர்ந்தது.
அந்தச் சம்பவத்தில் 24 வயது லயனல் டோவின் கை மணிக்கட்டுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தனது கை மணிக்கட்டில் எட்டு வார காலத்துக்கு பாதுகாப்பு உறை அணிய வேண்டியிருந்தது.
இதுபோன்ற காயங்கள் வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், பொதுச் சுகாதாரப் பராமரிப்பு வழி மூலம் மருத்துவ நிபுணர் சிகிச்சைக்கு பரிந்துரை பெற்று சிகிச்சை பெறுவதற்கு நீண்டகாலம் தேவைப்படுவதை லயனல் டோ உணர்ந்தார்.
அது தம்மைப் போன்றவர்கள் பயிற்சியில் ஈடுபட உகந்ததாக இல்லை என்பதை அவர் அறிந்தார்.
இந்தக் குறைபாட்டை நீக்கி உடற்குறையுள்ள திடல்தட வீரர்கள் பயன்பெறும் விதமாக புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் தொடர்ச்சியாக ‘ஐஎச்எச்’ சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் ‘பாரா அத்லெட்டிக்ஸ்’ சிங்கப்பூர் அமைப்பும் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இதன்மூலம், அனைத்து நிலைகளையும் சேர்ந்த உடற்குறையுள்ள திடல்தட போட்டியாளர்கள் இலவச சுகாதாரப் பராமரிப்பு சேவை பெறுவர்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனியார் மருத்துவமனை நடத்துநராக ‘ஐஎச்எச்’ உள்ளது.