புதுடெல்லி: கம்போடியாவில் இணைய மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் வேலை தருவதாகக் கூறி இந்தியர்களை அங்கு கொண்டு சென்று அவர்களை இணைய மோசடிகளில் பணியமர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு கம்போடியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கம்போடிய அரசுடன் இணைந்து செயல்பட்டு அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் கிட்டத்தட்ட 250 இந்தியர்களை மீட்டு அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஏறத்தாழ 75 பேர் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் இந்தியா திரும்பி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்திர் ஜயஸ்வால் சனிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
கம்போடியாவில் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அங்கு வலுக்கட்டாயமாக இணைய மோசடிகளில் ஈடுபட வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறித்து பதிலளித்த திரு ஜய்ஸ்வால் மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார்.
“இந்த மோசடிகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கம்போடிய அதிகாரிகள், முகவைகள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்று திரு ஜய்ஸ்வால் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய அரசும் கம்போடியாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்த மோசடிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டு இருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.

