வாடகைக்கு வாகனத்தை எடுத்த நபர் அதைத் திருப்பித் தராததால் அந்த 29 வயது சந்தேக நபரை காவல்துறையினர் சனிக்கிழமை (மார்ச் 30) அன்று விரட்டிப் பிடித்தனர்.
இதுபற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, கேலாங் லோரோங் 3லிருந்து மதியம் 1.05 மணிக்கு உதவி கேட்டு தங்களுக்கு அழைப்பு வந்தததாக தெரிவித்தது.
காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்றதும் சந்தேக நபர் தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது. அவரை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். போதைப் பொருள், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது, மோசடி மூலம் சொத்து வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ஓட்டம் பிடித்ததை நேரில் பார்த்த ஒருவர், அந்த நபர் கிட்டத்தட்ட 400 மீட்டர் ஓடியதாகவும் அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததாகவும் ஷின் மின் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
“பொன்னிறத் தலைமுடியுடன் இருந்த அந்த சந்தேக நபர், கார் ஒன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். அவரை ஆடவர்கள், மாதர் எனப் பலரும் சுற்றியிருந்தனர்,” என்று நேரில் பார்த்த அந்த நபர் விளக்கினார்.

