அந்திமகால இல்லப் பராமரிப்புக்கு பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவி

அந்திமகால இல்லப் பராமரிப்புக்கு பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவி

2 mins read
fc43e4ff-5cac-4cd8-9f95-529e456a554d
2023 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இணையவாசலை ஏறக்குறைய 400 பேர் பயன்படுத்துகிறார்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அந்திமகால இல்லப் பராமரிப்பைப் பரிந்துரைப்பதில் கைகொடுக்கிறது புதிய இணையவாசல். தாமதமற்ற அந்தப் பரிந்துரை மூலம் அதிகமானோர் உடல்நோவு தணிப்புப் பராமரிப்பை நாட உதவி கிடைக்கும்.

சிங்கப்பூர் அந்திமகாலப் பராமரிப்பு மன்றம் அந்த இணையவாசலை உருவாக்கி உள்ளது.

நாடு முழுவதும் அந்திமகாலப் பராமரிப்பு இல்லங்களில் இருப்போர் எண்ணிக்கை பற்றி உடனடி தகவல்களை அதில் பெறமுடியும்.

அந்த இல்லங்களில் காலி இடங்கள் உள்ளனவா என்று ஒவ்வோர் அமைப்பையும் அழைத்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் மருத்துவர்களுக்கு இனி இராது. அதன் மூலம் அவர்களின் நேரம் மிச்சமாகும்.

வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கான பராமரிப்பை மிக விரைவாக அதன் மூலம் உறுதி செய்ய இயலும்.

புதிய வசதியின் சிறப்புகள் குறித்து சிங்கப்பூர் அந்திமகாலப் பராமரிப்பு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் சிம் பீ ஹியா விளக்கினார்.

“பரிந்துரைப்பு நடைமுறை சுமுகமானது. மேலும், நேரம் என்பது அத்தியாவசியம் என்னும் பட்சத்தில் பராமரிப்பு இலக்கு பற்றிய துல்லியமான பரிந்துரைப்பும் அவசியமாகிறது,” என்றார் அவர்.

விரைவாக மூப்படையும் சிங்கப்பூரில் நோவு தணிப்புப் பராமரிப்பை மக்கள் நாடுவதை எளிமையாக்க அந்திமகாலப் பராமரிப்பு மன்றம் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியே புதிய இணையவாசல்.

2023 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட அந்த வசதியை தற்போது ஏறக்குறைய 400 பேர் பயன்படுத்துகிறார்கள்.

“இணையவாசலை உடல்நோவு தணிப்பு பராமரிப்பில் ஈடுபட்டுள்ள சிறப்பு மருத்துவர்கள் மட்டுமல்லாது எல்லா மருத்துவர்களும் பயன்படுத்தலாம். பலதுறை மருந்தகங்களின் மருத்துவர்களும் பொது மருத்துவர்கள் போன்ற தனியார் துறை மருத்துவர்களும் சிறப்பு மருத்துவர்களும் அதனைப் பயன்படுத்தலாம்.

“தற்போதுள்ள சவால்களில் அறியாமையும் ஒன்று. சமூகத்தில் உள்ள நோயாளிகளில் பலர் நலிவுற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் பலதுறை மருந்தக மருத்துவர்களையோ தனியார் மருத்துவர்களையோ சென்று பார்க்கிறார்கள்.

“எனவே, பரிந்துரைப்பு முறையை எந்த அளவுக்கு எளிமையாக்க இயலுமோ அந்த அளவுக்கு ஆக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்றார் திருவாட்டி சிம்.

குறிப்புச் சொற்கள்