ஜோசஃப் ஸ்கூலிங்: நன்றி, வாழ்த்து தெரிவித்த பிரதமர் லீ, சிங்கப்பூரர்கள்

நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ஜோசஃப் ஸ்கூலிங் ஏப்ரல் 2ல் அறிவித்துள்ளார். அவருக்கு 28 வயது.

2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூருக்காக தங்கம் வென்ற பெருமை அவரைச் சேரும்.

நீச்சல் போட்டிகளில் அவர் படைத்த எட்டு தேசிய சாதனை நேரங்கள் இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழுநேர தேசிய சேவையிலிருந்து விடுப்பு பெற்று தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்காகப் பயிற்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் கஞ்சா உட்கொண்டதை அவர் 2022ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, ஏப்ரல் 2ஆம் தேதி நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஸ்கூலிங் பேசினார்.

தமது சாதனைகள் சக சிங்கப்பூரர்களுக்கு ஊக்கவிப்பாக இருக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

வாழ்க்கைத் தொழில் காரணமாக நீண்டகாலமாக இருந்து வரும் மனப்போக்கை மாற்றி அமைக்க அது உதவும் என்று ஸ்கூலிங் நம்பிக்கை தெரிவித்தார். வாழ்வில் வெற்றி பெற பல வழிகள் உள்ளன என்று சிங்கப்பூரர்கள் உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நமது செயல்களைப் பார்த்து நாமே பெருமை அடைய வேண்டும். அது மிகவும் முக்கியம்,” என்றார் ஸ்கூலிங்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவது தொடர்பாகத் திட்டம் ஏதும் உள்ளதாக என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஸ்கூலிங் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

“இல்லை என்று சொல்லவே கூடாது,” என்று அவர் தெரித்தார்.

நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ஸ்கூலிங் அறிவித்தவுடன் நாட்டிற்குப் பெருமைத் தேடி தந்ததில் அவரது பங்களிப்புக்கு சிங்கப்பூரர்கள் பலர் சமூக ஊடகம் வாயிலாக அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

காலை 10 மணி நிலவரப்படி அவருக்கு நன்றி தெரிவித்து 300க்கும் மேற்பட்ட பதிவுகள் பதிவிடப்பட்டன.

ஸ்கூலிங்கின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் 17,000க்கும் அதிகமான ‘லைக்ஸ்’ இருந்தன.

அதிபர் புகழாரம்

ஓய்வுபெறும் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங்கைப் பாராட்டி அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று போட்டியிடுவது குறித்து சிலர் மட்டுமே கனவு காண்பர். அப்போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது, சாதனை நேரம் படைப்பது குறித்து இலக்கு கொண்டிருப்பவர்கள் அதைவிடக் குறைவு.

“சாதனை படைக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதை ஜோசஃப் ஸ்கூலிங் நம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளார். நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று பிறர் கொண்டுள்ள எண்ணத்தை முறியடித்து அதைக் கடந்து சென்று உச்சம் தொட முடியும் என்பதை அவர் நிரூபித்தார். கனவுகள் சிறியதாக இருந்தாலும் அல்லது பெரிதாக இருந்தாலும் அவற்றை நனவாக்க முடியும் என்று அவர் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

“2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று ஒலிம்பிக் போட்டியில் ஸ்கூலிங் தங்கம் வென்றபோது சிங்கப்பூரர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுகளுக்கு இருப்பதை அது காட்டியது. நன்றி ஜோஃப் ஸ்கூலிங்,” என்று அதிபர் தர்மன் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் பாராட்டு

“சிங்கப்பூர் கொடியை உயர பறக்கவிட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு எனது நல்வாழ்த்துகள்,” என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

உள்ளூர் விளையாட்டுத்துறை பிரபலங்களின் கருத்துகள்

சிங்கப்பூர் விளையாட்டுத் துறைக்கு ஜோசஃப் ஸ்கூலிங் அளித்த பங்களிப்பு அளப்பரியது எனச் சொல்லும் சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரரான சேமுவல் பெஞ்சமின் நடராஜா, 29, ஜோசஃப் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்துள்ளதாகக் கருதுகிறார். அவரது இம்முடிவு வருத்தமளித்தாக அவர் கூறினார். அவர் செய்த சாதனைகளுக்கு உரிய மரியாதையைத் தருவது அவசியம் எனவும் சொன்னார்.

ஜோசஃப், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருப்பதாக சிங்கப்பூரின் மூத்த ஓட்டப்பந்தய வீரர் கனகசபை குணாளன் தெரிவித்தார் ஓய்வுபெற அவர் எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட விவகாரம் என்றும் அதுகுறித்த விமர்சனங்கள் தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் அவருக்குத் தக்க மரியாதை செய்தது என்றார். இத்துடன் இந்த அத்தியாயம் முடிவடைந்தது என்று குறிப்பிட்ட திரு குணாளன், ஜோசஃப்பை நினைத்து சிங்கப்பூரர்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று கூறினார்.

விளையாட்டுப் போட்டிகளில் முழு ஆற்றலுடன் செயல்பட உகந்த இளம் வயதிலேயே ஜோசஃப் ஸ்கூலிங் ஓய்வு பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது என்றும் இன்னும் சில ஆண்டுகள் அவர் போட்டிகளில் களமிறங்கினால் சிங்கப்பூருக்கு மேலும் பெருமை சேர்த்திருப்பார் என்றும் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் ஜாஸ்பர் ரிச்சர்ட் தாமஸ், 43 தெரிவித்தார்.

“ஜோசஃப் ஸ்கூலிங் சிங்கப்பூரில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவர் இளம் வயதில் ஓய்வு பெற்றது சிங்கப்பூர் விளையாட்டுத் துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு” என்றார் விளையாட்டுத் துறை ஆர்வலரும், சிங்கப்பூர் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் மேலாளருமான திருவாட்டி வித்யா பிரகாஷ்,39. அவர் நீச்சல் போட்டிகளில் போட்டியிடவில்லை என்றாலும் தொடர்ந்து பயிற்சியளிப்பது, இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பது எனத் தொடர்ந்து பங்களிப்பார் என நம்புவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“கடும் பயிற்சிக்கும் பல வெற்றிகளுக்கும் சொந்தக்காரர் ஓய்வுபெறுவது சோகமானது. அவர் ஆழ்ந்து சிந்தித்தபின் இம்முடிவை எடுத்திருப்பார் என நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார் உலக உடல் கட்டழகு சம்மேளனத்தின் லெட்சுமணன் மாரியப்பன், 83.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!