கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய வழக்கு தொடர்பாக கம்போடியரான சு வென்சியாங்கிற்கு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரெங்கும் உள்ள பல சொகுசு வீடுகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இதில் $3 பில்லியனுக்கும் அதிகமான ரொக்கமும் பல விலை உயர்ந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாகப் பத்து வெளிநாட்டவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அவர்களில் 32 வயது சுவும் ஒருவர்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள லுயிஸ் சாலையில் அமைந்துள்ள உயர்தர பங்களா வீட்டில் சு கைது செய்யப்பட்டார். அந்த வீட்டில் அவர் வாடகைக்கு இருந்தார்.
சு வாடகைக்கு இருந்த வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது அவர் வைத்திருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் $601,706 ரொக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டவை என்று அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
சிங்கப்பூரில் இருந்துகொண்டே பிலிப்பீன்சை மையமாகக் கொண்டு சட்டவிரோத சூதாட்டத்தில் சு ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சீன நாட்டவர்கள் இணையம் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட சு வகை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சீனாவில் இணையம் மூலம் சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது.

