விநியோகிப்பாளர்கள் எதிர்நோக்கும் இணையப் பாதுகாப்புத் தடங்கல் மற்றும் இணையத் தாக்குதல்கள் பற்றி சிங்கப்பூரில் அத்தியாவசியச் சேவைகளை வழங்குவோர் அறிவிக்க வேண்டியது அவசியம்.
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ள மாற்றங்களில் இதுவும் ஒன்று.
மேலும், இணையப் பாதுகாப்புத் திருத்தச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்று தெரிவிக்குமாறு பெரிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வோரிடமும் சுயேச்சை பல்கலைக்கழகங்களிடமும் அதிகாரிகள் கேட்க முடியும்.
இணையப் பாதுகாப்புச் சட்டம் 2018ஆம் ஆண்டில் நடப்புக்கு வந்த பின்னர் அந்தச் சட்டத்தில் முதல்முறையாகத் திருத்தம் செய்யப்படுகிறது. அதற்கான மசோதா புதன்கிழமை (ஏப்ரல் 3) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மின்னிலக்கமயம் அதிகரிக்கும் நிலையில் இணைய அச்சுறுத்தல்கள் அடிக்கடி புலப்படாமல் போகலாம் என்பதால் சிஐஐ எனப்படும் முக்கிய தகவல் உள்கட்டமைப்புக்கான மேற்பார்வையை விரிவுபடுத்த மசோதா வகை செய்வதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை தெரிவித்து உள்ளது.
“இணைய பாதுகாப்புக்கும் முக்கிய தகவல் கட்டமைப்புக்கான இணைய மீள்திறனுக்கும் அந்தக் கட்டமைப்புக்கு உரியோரைப் பொறுப்பேற்கச் செய்வதை மசோதா உறுதிப்படுத்துவது முக்கிய அம்சம்.
“கட்டமைப்புக்கு உரியோர் தங்களது விநியோகத் தொடரில் ஏற்படுவதைப் போன்ற அதிக சம்பவங்கள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்,” என்று அந்த முகவை குறிப்பிட்டு உள்ளது.
எரிசக்தி, தண்ணீர், வங்கி மற்றும் நிதி, சுகாதாரப் பராமரிப்பு, போக்குவரத்து (நிலம், கடல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து), தகவல்தொடர்பு, ஊடகம், பாதுகாப்பு மற்றும் அவசரச் சேவைகள், அரசாங்கம் ஆகியன அந்தக் கட்டமைப்புக்குள் இடம்பெற்று இருக்கும் முக்கிய துறைகள்.

