நான்குமுறை மேசையின்கீழ் பதுங்கினோம்: தைவான் சென்றுள்ள சிங்கப்பூர்க் குடும்பம்

நான்குமுறை மேசையின்கீழ் பதுங்கினோம்: தைவான் சென்றுள்ள சிங்கப்பூர்க் குடும்பம்

1 mins read
16வது மாடி ஹோட்டல் அறையில் தங்கியிருந்தனர்
ac195152-ca03-451f-8b16-96c5ccb066ab
திரு அல் சியூ, தனது மனைவியுடனும் ஐந்து வயது வளர்ப்பு மகனுடனும் தைப்பேக்கு விடுமுறைப் பயணம் மேற்கொண்டதாகக் கூறினார். - படம்: ஏஷியாஒன்

சிங்கப்பூரரான 46 வயது அல் சியூவும் அவரது குடும்பத்தினரும் தைவானில் புதன்கிழமை (ஏப்ரல் 3) ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, ஹோட்டல் அறை மேசைக்குக்கீழ் பதுங்கிக்கொண்டதாகக் கூறியுள்ளனர்.

45 வயதாகும் தனது மனைவியுடனும் ஐந்து வயது வளர்ப்பு மகனுடனும் விடுமுறையைக் கழிக்கத் தைப்பே சென்றுள்ளார் திரு சியூ.

பசியாறியபின் காலை 8 மணியளவில் ஹோட்டல் அறைக்குத் திரும்பும்போது நில அதிர்வுகளை உணர்ந்ததாக அவர் கூறினார்.

“கட்டடம் ஆடியதை என்னால் உணர முடிந்தது. அறைகளுக்குள் பொருள்கள் விழும் சத்தத்தைக் கேட்டேன்,” என்று அவர் கூறியதாக ஏஷியாஒன் தெரிவித்தது.

மனைவியையும் பிள்ளையையும் பாதுகாக்க விரைந்தார் சியூ. அறையிலிருந்த மேசையின்கீழ் மூவரும் பதுங்கிக்கொண்டனர்.

ஒருமுறை, இருமுறை அல்ல. நான்குமுறை அவர்கள் அவ்வாறு பதுங்க நேர்ந்தது.

ஹோட்டலின் 16வது அறையில் தங்கியிருந்ததால், ஒருவேளை கட்டடம் இடிந்தால் தப்பிப்பது சிரமம் என்று அஞ்சியதாகக் கூறினார் சியூ.

மின்தூக்கிகள் செயல்படவில்லை. அதிர்ஷ்டவசமாக தொலைபேசித் தொடர்பில் இடையூறு இல்லை. உறவினர் மூலம் நிலநடுக்கத்தின் அளவு குறித்துக் கேள்விப்பட்டதும் கவலை அதிகரித்ததாக அவர் கூறினார்.

ஒருவழியாக, காலை 10.15 மணியளவில் மின்தூக்கிகள் செயல்படத் தொடங்கியதும் ஹோட்டலிலிருந்து சியூ குடும்பத்தினர் வெளியேறினர்.

பின்னர் தைப்பேயிலிருந்து காவ்சியுங் நகரைச் சென்றடைந்ததாகக் கூறிய சியூ, தாங்கள் நிலநடுக்கத்திலிருந்து தப்பித்துப் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டோரின் நிலை கவலையளிப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்