பொதுப் போக்குவரத்து தொடர்பான திருப்திநிலையில் அதிக மாற்றமில்லை

பொதுப் போக்குவரத்து தொடர்பான திருப்திநிலையில் அதிக மாற்றமில்லை

1 mins read
8f1f8d8d-e60f-4547-a14e-6f33fbd73c83
பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாகப் பயணிகளின் திருப்திநிலையை அறிந்துகொள்ள இந்த ஆய்வு 2006ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிகளின் திருப்திநிலை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக மாறுபடவில்லை என்று பொதுப் போக்குவரத்து மன்றம் ஏப்ரல் 3ல் தெரிவித்தது.

பொதுப் போக்குவரத்துச் சேவை திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 93 விழுக்காட்டினர் கூறினர்.

திருப்திநிலை புள்ளிகள் பட்டியலில் பத்துக்கு 7.8 புள்ளிகள் பதிவானது.

“அண்மைய ஆண்டுகளாக சிங்கப்பூர் ரயில் கட்டமைப்பு தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லத் தேவையான இணைப்பு மேம்பட்டது. இது பயணிகளைத் திருப்தி அடையச் செய்துள்ளது,” என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாகப் பயணிகளின் திருப்திநிலையை அறிந்துகொள்ள இந்த ஆய்வு 2006ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

பயணிகளின் எதிர்பார்ப்புகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது. அதுமட்டுமல்லாது, பொதுப் போக்குவரத்துச் சேவையில் எந்தெந்த அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளவும் ஆய்வு நடத்தப்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான ஆய்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இணையம் மூலம் நடத்தப்பட்டது. அதில் 15 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய 5,037 பயணிகள் பங்கெடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்