தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு சோதனைச்சாவடிகளிலும் 64% கார் பயணிகள் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தினர்

2 mins read
புனித வெள்ளியை ஒட்டிய நீண்ட வாரயிறுதி நிலவரம்
83470e40-f502-4fe3-a7d8-3ef53f99e70d
மார்ச் 28க்கும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் இடையே உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளைக் கடந்துசென்ற 415,000க்கும் மேற்பட்டோர், கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புனிதவெள்ளியை ஒட்டிய நீண்ட வாரயிறுதியில், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளை காரில் கடந்துசென்ற 64 விழுக்காட்டுப் பயணிகள், கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பயணிகள் இவ்விரு சோதனைச்சாவடிகளையும் கடந்து சென்றனர்.

அந்த ஐந்து நாள்களில் காரில் பயணம் செய்த 415,000க்கும் மேற்பட்டோர் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தியதாகக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் ஆணையம் ஏப்ரல் 3ஆம் தேதி தெரிவித்தது.

குடிநுழைவுச் சோதனைக்கு கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தும் முறை மார்ச் 19ஆம் தேதி தொடங்கியது.

சோதனைச்சாவடிகளில் கடப்பிதழைக் காட்டத் தேவையில்லாததால், குடிநுழைவுச் சோதனையை விரைவில் நிறைவுசெய்ய அது உதவுகிறது.

மார்ச் 28ஆம் தேதி சாதனை அளவாக 510,000 பயணிகள் நிலச் சோதனைச்சாவடிகள் வழியாகச் சென்றனர். மார்ச் 15ஆம் தேதி கிட்டத்தட்ட 500,000 பயணிகள் அவ்வாறு சென்றனர்.

ஏப்ரல் 10ஆம் தேதி நோன்புப் பெருநாளை ஒட்டி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கூறியது.

பயணத்துக்கு முன்பாகவே போக்குவரத்து நிலவரத்தைத் தெரிந்துகொள்ளும்படியும் கூடுதல் பயண நேரத்தைக் கருத்தில் கொள்ளும்படியும் பயணிகளை அது கேட்டுக்கொண்டது.

காரில் செல்லும் பயணிகள் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்த அது ஊக்குவித்தது.

அவர்கள் கடப்பிதழ்களை எடுத்துச் செல்வது கட்டாயம். மலேசியத் தரப்பில் அவற்றைக் காட்ட வேண்டும் என்பதை ஆணையம் நினைவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்