தைவான் நிலநடுக்கத்தில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 3ஆம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் தம்பதியர் காணாமல் போயினர்.
அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய தைவானில் உள்ள தொண்டூழியர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலநடுக்கம் தொடர்பான ஃபேஸ்புக் தகவல் குழுவின் நிர்வாகியான சன்னி சாண்டிரோ வாங், தம்பதியரான நியோ சியவ் சூ, சிம் ஹுவி கோக் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அவசரமாகத் தொடர்புகொள்ள விரும்புவதாக ஏப்ரல் 5ஆம் தேதி அன்று பதிவிட்டிருந்தார்.
“அவர்களுடைய சமூக ஊடகக் கணக்குகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறோம். அதன் வழி அவர்களுடைய கடைசி செய்தியையும் அவர்கள் கடைசியாக இருந்த இடத்தையும் கண்டறிய முடியும்,” என்று நிலநடுக்க நிவாரண முயற்சிகளில் உதவி வரும் திரு வாங் தெரிவித்தார்.
“அண்மையில் எடுக்கப்பட்ட அவர்களுடைய படம் தேவை. அவர்களின் பின்னணி விவரங்கள் தெரிய வந்தால் அவர்கள் எங்கு சென்றிருக்கலாம் என்பதை தீர்மானிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிட்ட பதிவில், காணாமல்போன ஆடவரின் சகோதரியுடன் ஒருவழியாகத் தொடர்புகொள்ள முடிந்ததை அவர் பகிர்ந்துகொண்டார். நிலநடுக்கம் நிகழ்ந்தபோது அவர்கள் இருந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக சகோதரியுடன் அவர் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.
“நீங்கள் தம்பதியை ஏதாவது ஒரு இடத்தில் பார்த்திருந்தால் உடனே நேரம் மற்றும் தேதியை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்,” என்று திரு வாங் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தைவானின் குடிநுழைவு அமைப்பு, ஆஸ்திரேலிய கடப்பிதழ் வைத்திருப்பதாகக் கூறப்படும் இரண்டு சிங்கப்பூரர்களும் ஒரு தம்பதி என்றும் அவர்களின் குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர் என்றும் கூறியது.
இதற்கிடையே வீட்டில் உள்ள வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தைவானுக்குச் செல்லும் திட்டத்தை இரு குடும்ப உறுப்பினர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.
ஏப்ரல் 3ஆம் தேதி காலை 6.30 மணியளவில் டரோகோ ஜார்ஜ் சுற்றுப் பயணப் பேருந்தில் தம்பதி ஏறிச் சென்றதாக தைவானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்தப் பேருந்து செல்ல வேண்டிய இடத்தை அடைந்தது. ஆனால் தம்பதி பாதி வழியில் இறங்கிவிட்டனர். அவர்கள் எந்த இடத்தில் இறங்கினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.