தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணைப் பிரதமர் வோங்: பொருளியல் மேம்பட ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

2 mins read
d5c3fa80-9c3f-4a43-b8d9-70af9e519bdf
லாவோசில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆசியான் நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
multi-img1 of 2

ஏற்றுமதி, சுற்றுப்பயணத்துறை ஆகியவை மீண்டு வந்திருப்பது பெரும்பாலான தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் 2023ஆம் ஆண்டில் இருந்த பொருளியல் நிலையைவிட இவ்வாண்டு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கருத்தை லாவோசில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆசியான் நாடுகளின் நிதி அமைச்சர்கள் முன்வைத்தனர்.

இருப்பினும், புவிசார் அரசியல் பதற்றநிலை, உலகளாவிய நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையின் நிலையற்றத் தன்மை, சீனாவின் பொருளியல் வளர்ச்சி பலவீனம் அடைந்திருப்பது ஆகியவை தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று 11வது ஆசியான் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இரண்டு நாள் கூட்டத்தில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார்.

தென்கிழக்காசிய நாடுகளின் பொருளியல் மற்றும் நிதித்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அனைத்து ஆசியான் நாடுகளையும் உள்ளடக்கிய நீடித்த நிலைத்தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்குவது, மின்னிலக்கப் பொருளியல் முறையைத் தழுவிக்கொள்வது ஆகியவை கூட்டத்தின் இலக்கு.

கூட்டத்தில் கலந்துகொண்ட ஆசியான் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் திரு வோங் கலந்துரையாடினார்.

நீடித்த நிலைத்தன்மையுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

“ஒன்று மட்டும் உறுதி. ஆசியான் நாடுகள் இடையே சில பொதுவான இலக்குகள் உள்ளன. அதை எந்த ஓர் ஆசியான் நாட்டினாலும் தனித்திருந்து எட்ட முடியாது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே ஆசியானின் முழு ஆற்றலை உணர முடியும்.

“ கூட்டு முயற்சியின் வாயிலாக, உலகளாவியப் பொருளியலில் ஆசியான் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருக்கும். இதன்மூலம் ஆசியான் நாடுகளின் மக்கள் பலனடைவர்,” என்று லுவாங் பிரபாங் நகரிலிருந்து சமூக ஊடகத்தில் துணைப் பிரதமர் வோங் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்