தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாம்போ வீட்டில் இறந்து கிடந்த 75 வயது மாது

2 mins read
5eba8404-578d-4c72-9ee8-be0d2b98f467
இறந்தவரின் வீடு புளோக் 8 செயின்ட் ஜார்ஜஸ் லேனில் 10வது மாடியில் உள்ளது. - படம்: கூகல் வரைபடம்

இந்த வாரத் தொடக்கத்தில் வாம்போவில் உள்ள தமது வீட்டில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

75 வயதான அவர் தனியாக வசித்து வந்ததாக அண்டைவீட்டார் தெரிவித்தனர்.

அவர் வசித்த புளோக்கில் துர்நாற்றம் கண்டறியப்பட்டு ஐந்து நாள்களுக்கு மேலாகியும் அந்த வாடை இன்னும் போகவில்லை.

அந்த மாது இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) கண்டறியப்பட்டதாக ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்தது.

இறந்தவரின் வீடு புளோக் 8 செயின்ட் ஜார்ஜஸ் லேனில் 10வது மாடியில் உள்ளது.

அந்த புளோக்கின் 11வது மாடியில் வசிக்கும் லூனா என்ற 44 வயது இல்லப் பணிப்பெண், திங்கட்கிழமை (ஏப்ரல் 1) பிற்பகலில் தமது சமையலறையில் துர்நாற்றம் வீசுவதை முதன்முதலில் கண்டறிந்ததாக ஷின் மின்னிடம் தெரிவித்தார்.

இதனால் சன்னல்களை அவர் மூடினார். பின்னர், துர்நாற்றம் வீசும் இடத்தைக் கண்டறிந்த அவர், இறந்தவரின் வீட்டுக் கதவைத் தட்டினார். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.

பின்னர் காவல்துறையை அழைக்குமாறு அண்டைவீட்டாரிடம் அந்தப் பணிப்பெண் கேட்டுக்கொண்டார். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அந்த மாதின் உடலைக் கண்டெடுத்தனர்.

ஷின் மின் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, இயற்கைக்கு மாறான மரணத்தை உறுதிப்படுத்தினார்.

வீட்டில் 75 வயது மாது ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்தார் என்றும் அவர் இறந்துவிட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இச்சம்பவத்தில் சூது இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்