பழைய தெம்பனிஸ் வட்டார நூலகக் கட்டடம் தற்காப்பு அமைச்சு வட்டார அலுவலகமாக மாற்றம்

பழைய தெம்பனிஸ் வட்டார நூலகக் கட்டடம் தற்காப்பு அமைச்சு வட்டார அலுவலகமாக மாற்றம்

2 mins read
ebb1e655-7e49-4040-a293-15dbf663dd06
தெம்பனிஸ் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்-வொர்க்ஸ் அலுவலகத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபடும் தற்காப்பு அமைச்சு ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தெம்பனிஸ் அவென்யூ 7ல் உள்ள பழைய தெம்பனிஸ் வட்டார நூலகக் கட்டடம் தற்போது தற்காப்பு அமைச்சின் வட்டார அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

தற்காப்பு அமைச்சு அதன் ஊழியர்களுக்காக நடைமுறைப்படுத்தியுள்ள வீட்டிற்கு அருகில் உள்ள வட்டார அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளை வகை செய்யும் நோக்கில் இம்மாதிரி நான்கு அலுவலகங்களைத் தற்காப்பு அமைச்சு திறந்துள்ளது.

இந்த அலுவலகங்களில் தங்களுக்குத் தேவையான கட்டமைப்புகளைத் தற்காப்பு அமைச்சு ஊழியர்கள் பயன்படுத்தலாம். தற்காப்பு அமைச்சு தொடர்பான பணிகள் ரகசியமானவை என்பதால் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சில பணிகளை அவர்களால் வீட்டில் செய்ய முடியாது. எனவே, அதை அவர்கள் அலுவலகத்தில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்காப்பு அமைச்சின் வீட்டிற்கு அருகில் உள்ள வட்டார அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் திட்டத்துக்கு எம்-வொர்க்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னோட்டத் திட்டமாக புக்கிட் மேராவில் உள்ள பழைய ஸ்பிரிங் சிங்கப்பூர் கட்டடத்திலும் ஈசூன் வட்டாரத்தில் உள்ள சொங் பாங் முகாமிலும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வட்டார அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெப்போ சாலையில் உள்ள தற்காப்புத் தொழில்நுட்பக் கட்டடம் ‘பி’யிலும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பழைய தெம்பனிஸ் வட்டார நூலகக் கட்டடத்திலும் வட்டார அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

இந்த நான்கு அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் மொத்தம் 400 பேர் பணிபுரியலாம்.

இந்த நான்கு வட்டார அலுவலகங்களின் மாதாந்திரப் பயன்பாட்டு விகிதம் ஏறத்தாழ 75 விழுக்காடாகப் பதிவாகி உள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்காப்புத் தொழில்நுட்பக் கட்டடம் ‘பி’ ஆக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாக அது தெரிவித்தது.

அதன் மாதாந்திரப் பயன்பாட்டு விகிதம் 80 விழுக்காட்டுக்கும் 90 விழுக்காட்டுக்கும் இடையே இருப்பதாக தற்காப்பு அமைச்சு கூறியது.

ஊழியர்கள் அலுவலகத்துக்குப் பயணம் செய்யும் நேரத்தைக் குறைக்க இந்த வட்டார அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்