கடைத்தொகுதியில் பெண்களை ஆபாசமாகப் படமெடுத்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது

கடைத்தொகுதியில் பெண்களை ஆபாசமாகப் படமெடுத்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது

1 mins read
49a8b860-34dc-4e70-adc2-8dd27700fb94
‘அபிரியா’ கடைத்தொகுதியில், பயன்படுத்திய பொருள்களை விற்கும் வாராந்தரச் சந்தையில் கடை நடத்தும் பெண்கள் இருவர், அந்த ஆடவரின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கையைக் கண்டுப் புகாரளித்தனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காலாங் வட்டாரத்திலுள்ள ‘அபிரியா’ கடைத்தொகுதியில், ஏப்ரல் 7ஆம் தேதி, பெண்களை ஆபாசமாகப் படமெடுத்ததாகக் கூறப்படும் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

‘அபிரியா’ கடைத்தொகுதியின் முதல் தளத்தில், பயன்படுத்திய பொருள்களை விற்பனை செய்யும் ‘த லக்கேஜ் மார்கெட்’ எனும் வாராந்தரச் சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் இடம்பெறும்.

அதில் கடை நடத்தும் பெண்கள் இருவர், ஆடவரின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கையைக் கண்டனர்.

அவர்களில் ஒருவர், தங்கள் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ஆடைகளைப் பிற்பகல் 3.30 மணியளவில் அந்த ஆடவர் பார்வையிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

ஆடவர் தன் கைத்தொலைபேசியை வித்தியாசமான கோணத்தில் பிடித்திருப்பதைக் கண்டு கேள்வி எழுப்பியபோது, இதைப் பெரிதாக்க வேண்டுமா என அவர் கேட்டதாகக் கூறப்பட்டது. ஆடவரின் கைத்தொலைபேசி ‘காணொளி’ எடுத்துக்கொண்டிருந்தது தெரியவந்ததாக அவர்கள் கூறினர்.

சினமடைந்த பெண்கள் இருவரும் ஆடவர் எடுத்த காணொளியைக் காட்டும்படி கேட்டபோது, முதலில் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் பின்னர் அவரது கைத்தொலைபேசியில் சில காணொளிகளைக் கண்டதாகவும் அவை அனைத்தும் ஆபாசக் காணொளிகள் என்றும் அப்பெண்கள் தெரிவித்தனர்.

ஆடவரை விசாரித்த அக்கடைத்தொகுதியின் பாதுகாவல் அதிகாரிகள், பெண்களின் ஒப்புதலுடன் காவல்துறைக்குத் தகவல் தந்தனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்