$3 பி. பணமோசடி வழக்கு: ஆடவர் மீது மேலும் ஆறு குற்றச்சாட்டுகள்

1 mins read
95e88da5-69ea-4a65-86d9-a6cfae201eac
மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் வாங் பாவ்சென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஓவியம்

$3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பான வழக்கில் 10 வெளிநாட்டவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களில் ஒருவரான 32 வயது வாங் பாவ்சென் மீது ஏப்ரல் 11ஆம் தேதியன்று கூடுதலாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

விசாரணையின்போது அதிகாரிகளிடம் பொய் கூறியதாக சீன நாட்டவரான வாங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அத்துடன், போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதற்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகள், வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை வாங் எதிர்நோக்குகிறார்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று வாங் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, அவர் எட்டு மாதங்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான வாங்மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் அவர் மிகுந்த வருத்தமடைந்தார். சீனா, வனுவாட்டு குடியரசு ஆகிய இரு நாடுகளின் கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் வாங், இருமுறை பிணை பெற முயன்றார். ஆனால், ஒவ்வொருமுறையும் அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

பணமோசடி வழக்கு தொடர்பாக இதுவரை 3 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பணமும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, இவ்வழக்கில் தொடர்புடைய வேறு இரு ஆடவர்களுக்கு இம்மாதம் முற்பகுதியில் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்