பாரிசில் தெமாசெக் அலுவலகம் திறப்பு

பாரிசில் தெமாசெக் அலுவலகம் திறப்பு

2 mins read
e5dfda99-c4a0-4cd1-9a23-2d95082f1e3f
பாரிசில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தெமாசெக் அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட (இடமிருந்து வலம்) வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரான்சின் பொருளியல், நிதி, தொழில்துறை, மின்னிலக்க இறையாண்மை அமைச்சர் புரூனோ லெமேர். - படம்: எஸ்பிஎச் மீடியா

பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் சிங்கப்பூரின் தெமாசெக் முதலீட்டு நிறுவனம் புதிய அலுவலகம் ஒன்றை ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியன்று திறந்தது.

இதுவே ஐரோப்பாவில் தெமாசெக் நிறுவனத்திற்கு இருக்கும் மூன்றாவது அலுவலகம். இத்துடன் சேர்த்து ஒன்பது நாடுகளில் தெமாசெக்கிற்கு 13 அலுவலகங்கள் உள்ளன.

ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் முதலீடு, பங்காளித்துவ வாய்ப்புகள், திறனாளர் எண்ணிக்கை ஆகியவற்றை மேம்படுத்த லண்டன், பிரசல்ஸ், பாரிஸ் ஆகிய நகரங்களில் உள்ள தனது அலுவலகங்கள் உதவும் என்று தெமாசெக் நிறுவனம் கூறியது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் $20 பில்லியனிலிருந்து $25 பில்லியன் வரை முதலீடு செய்ய தெமாசெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

பாரிஸ் அலுவலகத்தின் திறப்பு விழாவில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திறப்பு விழாவில் பிரான்சின் பொருளியல், நிதி, தொழில்துறை, மின்னிலக்க இறையாண்மை அமைச்சர் புரூனோ லெமேரும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனினும் கலந்துகொண்டனர்.

உலக நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் பங்காளிகளும் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இக்காலகட்டத்தில் போட்டித்தன்மை அதிகம் இருப்பதால் உலக நாடுகள் மற்றும் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று திரு வோங் வலியுறுத்தினார்.

பொருளியல் ஆற்றல், அனைத்துத் தரப்பினரும் பலனடையும் முறை ஆகியவற்றுக்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு, மீள்திறன் ஆகியவற்றில் பல நாடுகள் அதிக கவனம் செலுத்துவதைத் துணைப் பிரதமர் வோங் சுட்டினார்.

இத்தகைய சவால்கள் இருக்கும் அதே வேளையில், உலகளாவிய நிலையில் பல வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

தெமாசெக் அதன் 50வது ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறது.

குறிப்புச் சொற்கள்