தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவில் சமைக்கக்கூடிய பன்றி இறைச்சி உணவுப் பொருள்களை மீட்டுக்கொள்ள உத்தரவு

1 mins read
ஒப்புதல் வழங்கப்படாத மலேசிய நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்பட்டவை தொடர்பில் ‘எஸ்எஃப்ஏ’ நடவடிக்கை
3d937bd4-c47c-4928-b4af-86f027665bbd
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ‘சேமி இன்ஸ்டன்ட் குக்கிங் பக் குத் தே’யின் இரண்டு வகை உணவுப் பொருள்களை மீட்டுக்கொள்ள சிங்கப்புர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ), ‘பக் குத் தே’ எனப்படும் பன்றி இறைச்சி (எலும்பு) உணவுப் பொருள்கள் இரண்டை மீட்டுக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

அவை ஒப்புதல் வழங்கப்படாத மலேசியா நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்பட்டவை.

‘சேமி இன்ஸ்டன்ட் குக்கிங் பக் குத் தே வித் ரைஸ்’ எனும் இரண்டு வகை உணவுப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டுக்குமேல் பன்றி இறைச்சி கலந்திருப்பதாக ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அமைப்பு தெரிவித்தது.

இறைச்சி, இறைச்சி சார்ந்த உணவுப்பொருள்களை சிங்கப்பூர் உணவு அமைப்பின் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்குப் பொருந்துபவையாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தருவிக்க இயலும்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்விரு உணவுபொருள்களை மீட்டுக்கொள்ளும்படி இறக்குமதியாளர்களுக்கு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

“அறிமுகமற்ற அல்லது ஒப்புதல் பெறாத இடங்களிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருள்களால் பயனாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு தொடர்பான அபாயம் ஏற்படக்கூடும்,” என்று அது கூறியது.

சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்களை வாங்கியோர் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என அது ஆலோசனை கூறியது.

ஏற்கெனவே பயன்படுத்தியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த உணவுப்பொருள்களை வாங்கியோர் மேல்விவரங்களுக்கு தாங்கள் அவற்றை வாங்கிய கடைகளை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்