சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக நடத்தும் முத்தமிழ் விழாவில் தமிழகத்தின் கீழடி அகழாய்வின் மூலம் புகழ்பெற்ற திரு. கி. அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்புரை ஆற்றவிருக்கிறார். அவர் ‘கீழடியின் ஆற்றல்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் வழக்கம்போல் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது வழங்கப்படும். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நடத்தப்பட்ட மாணவர் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் பொது மக்களுக்கான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்பும் இடம்பெறும்.
பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சின்னஞ்சிறார்களின் மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்றுகளும் உண்டு. அத்துடன் கண்கவர் நடனம், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கதை சொல்லும் திறன், பேச்சுத் திறன் ஆகியவை நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.
இலக்கியவாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திரண்டு வருமாறு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் அன்புடன் அழைக்கிறது.