டான் சீ லெங்கும் புதிய அடித்தளத் தலைவர்களும் மரின் பரேடைச் சிறப்பாக வழிநடத்துவர்: கோ சோக் டோங்

டான் சீ லெங்கும் புதிய அடித்தளத் தலைவர்களும் மரின் பரேடைச் சிறப்பாக வழிநடத்துவர்: கோ சோக் டோங்

2 mins read
4bb67087-b3cc-4df4-8e85-8f0eb17a9aae
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (இடம்), ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ( நடுவில்) இருவரும் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற மரின் பரேட் வட்டாரத்தின் 50ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் சூ பெய் லிங் (திரு கோவிற்கு இடப்பக்கம்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரின் பரேட் வட்டாரத்தை எதிர்காலத்தில் டாக்டர் டான் சீ லெங்கும் (மனிதவள அமைச்சர்) புதிய அடித்தளத் தலைவர்களும் சிறப்பாக வழிநடத்துவர் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.

ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற மரின் பரேட் பகுதியின் 50ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றினார்.

புதிய அடித்தளத் தலைவரான டாக்டர் சூ பெய் லிங் நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையும் பிரதிநிதிப்பதாகத் திரு கோ கூறினார்.

மரின் பரேட் அடித்தள அமைப்புகளின் கௌரவ ஆலோசகராக விளங்கிய திரு கோ, 1976ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.

மரின் பரேட் தலைமைத்துவ மாற்றம் குறித்துப் பேசிய அவர், தேசிய அளவில் பிரதமர் லீ சியன் லூங்கும் இவ்வாண்டில் தலைமைத்துவப் பொறுப்புகளைத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பார் என்று கூறினார்.

கொண்டாட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக்குழுத் தலைவராகச் செயல்பட்ட டாக்டர் சூ, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அடித்தள அமைப்பில் தொண்டூழியராகவும் மரின் பரேட் வட்டாரத்துக்கான மக்கள் செயல் கட்சியின் இளையர் பிரிவுத் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.

டாக்டர் சூ பெய் லிங்.
டாக்டர் சூ பெய் லிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மை மாதங்களாக மனிதவள அமைச்சருடனும் மரின் பரேட் குழுத்தொகுதிக்கான மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பல்வேறு நிகழ்ச்சிகளில் டாக்டர் சூ கலந்துகொள்கிறார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஊடகத்தினரின் கேள்விக்குத் தாம் தொண்டூழியம் செய்வதாக அவர் பதிலளித்தார்.

மரின் பரேட் பேட்டை நில மீட்புத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் டான், அதன் மேம்பாட்டிற்கு 40 ஆண்டுகளுக்குமேல் திரு கோ ஆற்றிய பங்களிப்பைப் புகழ்ந்துரைத்தார். தொண்டூழியர்கள், சமூகப் பங்காளிகளின் அர்ப்பணிப்பு உணர்விற்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

புதிய ரயில் நிலையம், புதிய சமூக மன்றம், பராமரிப்பு நடுவம், நூலகம் போன்றவற்றைக் குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்