தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் தர்மன்: இட்லி, தோசைக்கு ஈடு இணையாக வேறு உணவுவகை இல்லை

1 mins read
6cae0005-35c7-4442-859c-de88279625e6
தோசை, இட்லி ஆகியவை மிகவும் ஆரோக்கியமான உணவுவகைகள் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். - படம்: இணையம்

சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் தமிழர்கள், விஷு பண்டிகையைக் கொண்டாடும் மலையாளிகள், வைசாக்கி திருநாளைக் கொண்டாடும் சீக்கியர்கள் ஆகியோருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக ஏப்ரல் 14ஆம் தேதியன்று வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

காலை உணவைப் பொறுத்தவரை, தமக்கு மிகவும் பிடித்தமானது தோசை அல்லது இட்லிதான் என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

“அவற்றுக்கு ஈடு இணையாக வேறு உணவுவகை இல்லை,” என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

தோசையையும் இட்லியையும் சாம்பார், சட்னியுடன் சாப்பிடும்போது அவை மிகவும் சுவையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாது, அவற்றைக் கையால் சாப்பிடும்போது அதன் சுவையே தனி என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை சேர்க்கப்படாத வெறும் தோசையே தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.

“முட்டையைச் சேர்க்கும்போது தோசையின் தனித்தன்மை இல்லாமல் போய்விடுகிறது. தோசைக்கென்றே உள்ள தனிச் சுவையை சுவைக்க முடியாத நிலை ஏற்படுகிறது,” என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.

தோசை, இட்லி ஆகியவை மிகவும் ஆரோக்கியமான உணவுவகைகள் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்