தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வழிபாடும் கொண்டாட்டமும் நிறைந்த புத்தாண்டு

2 mins read
24a561c0-f0f1-4c88-a5d7-d4a9997a74ec
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் கூடிய பக்தர்கள். - படம்: பே. கார்த்திகேயன்

சித்திரை மாதத்தின் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழர்களால் உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்கம் இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அமைந்ததால் லிட்டில் இந்தியாவில் வழக்கத்துக்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் காலையிலிருந்து நண்பகல் 12.30 மணி வரை புத்தாண்டு தரிசனம் பெறுவதற்கு பக்தர்கள் கூடினர்.

சுயதொழில் செய்து வரும் திரு நாராயணசாமி, 49, முதல்முறையாக தம் குடும்பத்தினருடன் புத்தாண்டுக்காக வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். சீன இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட அவர், புத்தாண்டுக்காக மனைவி வீட்டில் செய்த ஏற்பாடுகளைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வெளியே நாராயணசாமி குடும்பத்தார்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வெளியே நாராயணசாமி குடும்பத்தார். - படம்: பே. கார்த்திகேயன்

“வழக்கமாக நாங்கள் புத்தாண்டு தினத்தன்று லட்சுமிநாராயணன் கோவிலுக்குத்தான் செல்வோம். இம்முறை நான் என் குடும்பத்தோடு வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வந்தேன். என் மனைவி புத்தாண்டுக்கு முன்பே வீட்டில் பூசைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு ஒரு புதிய அனுபவம்,” என்றார் திரு நாராயணசாமி.

ஞாயிற்றுக்கிழமைகளில் லிட்டில் இந்தியாவுக்குச் செல்லும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கைவிட புத்தாண்டு தினத்தில் அது கூடுதலாக இருந்தது.

“புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை வந்ததில் பெரும் மகிழ்ச்சி. இந்தியாவில் இருந்தால் எங்களால் குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாட முடியும்.

“ஆனால் சிங்கப்பூரில் இருப்பதால் என் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்து நேரம் செலவிட்டு இன்புற முடிகிறது,” என்றார் மின்தூக்கி பழுதுபார்க்கும் வேலை செய்யும் நாகராஜன் ராஜா, 32.

வழிபாடும் கொண்டாட்டமும் நிறைந்த நாளில் லிட்டில் இந்தியா நகைக்கடைகளில் தங்க விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் நகை வாங்க வாடிக்கையாளர்கள் திரண்டனர்.

“புத்தாண்டு தமிழர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் நாள். இன்று நகை வாங்கினால் நம் வழக்கத்தின்படி மிக நல்லது. அதனால் நானும் என் நண்பர்களும் கோவிலுக்குச் சென்ற பிறகு நகைக்கடைக்கு வந்தோம்,” என்றார் கட்டுமானத் துறை ஊழியர் முருகேசன் ராஜபிரபு, 24.

கோவில்களில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. பூக்கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது.

“புத்தாண்டுக்காக நாங்கள் சிறப்பு மஞ்சள் பூக்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழர்களுக்கு அப்பாற்பட்டு விஷு பண்டிகைக்கு மலையாள சமூகத்தினரும் பூக்களை வைத்து வழிபடுவர். புத்தாண்டுக்கு முன்பே இல்ல வழிபாட்டிற்கு பூக்களை வாங்க வாடிக்கையாளர்கள் வந்தனர்,” என்று கடை மேலாளர் மாதவன், 30, கூறினார்.

குழந்தை கல்வியாளரான நளினி ராஜேந்திரனுக்கு புத்தாண்டு சிறப்பான தொடக்கம். மேற்படிப்பு தொடங்கவிருக்கும் அவர், தம் மகள் பூப்பந்து விளையாட்டில் சேரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

“புத்தாண்டு நாளன்று என் குடும்பத்தில் அனைவரும் காலையில் எழுந்து வீட்டில் வ்ழிபாடு செய்த பிறகு கோவிலுக்குச் செல்வோம். இன்று இனிப்புப் பலகாரங்களை வாங்கி நான் என் மாமியாரைப் பார்க்கச் செல்கிறேன்,” என்றார் நளினி, 43.

குறிப்புச் சொற்கள்