கரிம வெளியேற்றத்தைத் துல்லியமாக அளவிட உள்ளூர் வர்த்தகங்களுக்கு உதவும் வகையில் புதிய பதிவகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான முடிவுகளை அவை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எமிஷன்ஸ் ஃபேக்டர் ரெஜிஸ்ட்ரி’ என்று அழைக்கப்படும் புதிய பதிவகத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஏப்ரல் 15ஆம் தேதியன்று தொடங்கிவைத்தார்.
இந்தத் தரவுத்தளத்துக்கு சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் தலைமை தாங்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு உள்ளூர் வர்த்தகங்கள் அவற்றின் கரிம வெளியேற்றத்தை அளவிடுகின்றன.
ஆனால் கரிம வெளியேற்றத்தைப் பொறுத்தவரை, நிலக்கரி மூலம் மின்சாரம் பெறும் நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வேறுபடுகிறது. எனவே கரிம வெளியேற்றத்தை அளவிடும் முறையும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.
கரிம வெளியேற்றம் தொடர்பாகப் புதிய பிரிவுகளும் நடவடிக்கைகளும் புதிய திட்டத்தின்கீழ் சேர்த்துக்கொள்ளப்படும் என்று சம்மேளனம் கூறியது.
சிங்கப்பூரில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் 2025ஆம் நிதி ஆண்டிலிருந்து பருவநிலை தொடர்பான தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலிடப்படாத, பெரிய நிறுவனங்கள் பருவநிலை தொடர்பான தரவுகளை 2027ஆம் நிதி ஆண்டிலிருந்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தரவுகள் மூலம் நிறுவனங்களின் கரிம வெளியேற்ற அளவு தெரியவரும்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக நீடித்த நிலைத்தன்மை தரநிலை வாரியம் வகுத்துள்ள தரநிலைக்கு உட்பட்டு நிறுவனங்களின் கரிம வெளியேற்ற அளவு இருக்க வேண்டும்.