தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023ல் பாலியல் குற்றங்கள் தொடர்பில் 470 இளையர்கள் கைது

3 mins read
f7783ccb-f58f-45d5-89fe-e0ffa756de31
கைது செய்யப்பட்ட இளையர்களில், வயது குறைந்தோருடன் பாலியல் உறவு கொண்டவர்கள்தான் அதிகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2023ஆம் ஆண்டில் பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களில் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகம் இருந்தனர். அவர்களில் 470 பேர் இக்குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்கள். இந்த விகிதம் 2022ஐக் காட்டிலும் 30% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற பாலியல் குற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், இந்த அதிகரிப்புக்கு இரு காரணங்களைக் குறிப்பிட்டார்.

வெளிப்படையான பாலியல் தொடர்பான காணொளிகள் அல்லது பெரியவர்களுக்கான பாலியல் செயல்பாடு பற்றி இளையர்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் முதலாவது காரணம்.

கைது செய்யப்பட்ட இளையர்களில், வயது குறைந்தோருடன் பாலியல் உறவு கொண்டவர்கள்தான் அதிகம். அதில் பெரும்பாலான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம் புரிந்தவர்களுக்கும் முன் அறிமுகம் இருந்தது.

இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு, இணையம், கைப்பேசி ஆகியவையே முக்கிய காரணம் என்றும் இளையர்கள் இந்த மின்னிலக்கச் சாதனங்களில் மூழ்கியிருப்பதால் அதன்பால் மிக எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள் என்றார் உள்துறை அமைச்சின் உதவி இயக்குநரும் தலைமை உளவியலாளருமான ஷாமளா கோபாலகிருஷ்ணன்.

“பாலியல் தொடர்பான விஷயங்கைளக் கற்றுக்கொடுக்கும் கருவியாக இணையம் விளங்குவதால், ஆபாசக் காட்சிகள், பாலியல் தொடர்பான காணொளிகள் பாலியல் உறவு பற்றிய தவறான தகவல்கள் எளிதில் பரப்பப்படுகின்றன. அதுதான் எங்கள் அக்கறையாக உள்ளது.

“இளையர்களிடம் தென்படும் முறையற்ற பாலியல் பழக்க வழக்கங்களை முன்கூட்டியே கண்டறியாமல் விட்டுவிட்டால், இணையத்தில் உலா வரும் வெளிப்படையான பாலியல் தொடர்பான காணொளிகளை அதிக நேரம் பார்க்கும் பழக்கத்துக்கு அவர்கள் கவரப்படுவார்கள்.

“அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நம்பத்தகாத, தீங்கு விளைவிக்கும் கருத்துகளைக் கடைப்பிடிக்கின்றனர். இது அவர்கள் பாலியல் குற்றங்கள் புரிவதற்கு வழி வகுக்கின்றன,” என்றும் திருவாட்டி ஷாமளா தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, திருவாட்டி ஷாமளாவும் அவரது பிரிவும் கல்வி அமைச்சுடன் இணைந்து முறையற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நிகழும் சாத்தியங்களைக் குறைப்பதற்கு திட்டங்களை வகுக்கும்.

இளையர்கள் பாலியல் குற்றங்கள் புரிவது பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதும் பாலியல் குற்றங்கள் புரிவோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் சட்டத்தில் உள்ள தண்டனை நடவடிக்கைகள் பற்றி புரிய வைப்பதும் இந்தக் கருத்தரங்கின் நோக்கம் என்று காவல்துறை தெரிவித்தது.

தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் சிறைத் துறை, அரசு சாரா அமைப்பான ‘எஸ்ஜி ஹெர் எம்பவர்மண்ட்’, காவல்துறையின் கடுமையான பாலியல் குற்றங்களுக்கு எதிரான பிரிவின் நிபுணர்கள் முதலியோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

“இளையர்களிடையே பாலியல் குற்றங்களைக் குறைப்பதற்கு, உள்துறை அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து, சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் உதவும் ஆலோசகர்களுக்கு மேம்பட்ட பயிற்சியளிக்கப் பணியாற்றி வருகின்றன,” என்று அமைச்சர் சுன் கூறினார்.

பள்ளிகளிலும் சமூகத்திலும் உள்ள ஆலோசகர்களுக்குப் பயிற்சியளிக்கும் வளத் தொகுப்புத் திட்டத்தை இரு அமைச்சுகளும் உருவாக்கி வருகின்றன. அதன் மூலம் சிறுவர்களிடமும் இளையர்களிடமும் தென்படும் தீங்கு விளைவிக்கும் பாலியல் நடத்தைகளைக் கண்டறியும் முறைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.

இந்த வளத் தொகுப்பு 2024 பிற்பாதியில் தயாராகிவிடும் என்றும் அது ஆலோசகர்களுக்குப் பெரிதும் உதவும் என்றும் கூறிய திருவாட்டி சுன், காவல்துறையும் பள்ளிகளுக்குச் சென்று பாலியல் குற்றத்தைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி மாணவர்களிடம் பேசும் என்று சொன்னார்.

“பாலியல் குற்றம் தொடர்பான காவல்துறை விசாரணை முடிவடைந்த பின்னும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைய வயதினருக்கு அதிக ஆதரவு வழங்கப்படும். கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டம் (இதர திருத்தங்கள்) மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் பங்கம் ஏற்படாத வண்ணம் தடயவியல் சான்றுகளைச் சேகரிப்புதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.

2023 ஏப்ரலில் நடந்த கருத்தரங்கில், பாலியல் குற்றங்கள் தொடர்பில் அக்கம்பக்க காவல்துறை நிலையங்களில் புகார் கொடுக்க செல்லும் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமையும் மேம்பட்ட தனியுரிமையும் வழங்கப்படும்.

இந்த முறை முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வரிசை எண் எடுப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு புகார் அளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவாட்டி சுன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்