படிப்படியாக முன்னேறி கவனத்தை ஈர்த்தவர்

2 mins read
37138158-d8b6-472b-b9fe-02294f6fbc38
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

51 வயதாகும் திரு லாரன்ஸ் வோங் 1972 டிசம்பரில் பிறந்தவர். 2011ஆம் ஆண்டு தமது 39வது வயதில் அரசியலில் அடி எடுத்து வைத்தார். அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அடுத்த ஆண்டே, அதாவது 2012ஆம் ஆண்டிலேயே கலாசார, இளையர், விளையாட்டுத் துறை அமைச்சின் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஈராண்டுகளில் அந்தத் துறையின் அமைச்சர் ஆனார்.

2015 தேர்தலுக்குப் பிறகு தேசிய வளர்ச்சி அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு வோங் 2020 ஜூலை வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார்.

2020ஆம் ஆண்டு கொவிட்-19 அமைச்சுநிலை பணிக்குழு அமைக்கப்பட்டபோது அப்போதைய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்குடன் இணைந்து அக்குழுவின் தலைவர்களில் ஒருவரானார்.

கொவிட்-19 காலத்தில் அவர் செயல்பட்ட விதத்தைக் கவனித்த அரசியல் பார்வையாளர்கள் நாட்டின் அடுத்த தலைமைத்துவத்துக்கு திரு வோங் பொருத்தமானவராக இருப்பார் என்று அடையாளம் காட்டினர்.

அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கக்கூடும் என்று பேசப்பட்டு வந்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், 2021 ஏப்ரலில் தமது வயதைக் காரணம் காட்டி அந்தப் பதவியை விரும்பவில்லை என்பதை கோடி காட்டினார்.

நிதி அமைச்சராகவும் இருந்த திரு ஹெங்கிற்கு அப்போது வயது 60.

பின்னர், அதுவரை கல்வி அமைச்சராக இருந்த திரு வோங், திரு ஹெங் வகித்து வந்த நிதி அமைச்சர் பொறுப்புக்கு மாற்றப்பட்டார்.

அதனால், அடுத்த தலைமைத்துவம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு 2022 ஏப்ரல் 16ல் விடை கிடைத்தது.

மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவராக திரு வோங் பெயர் குறிப்பிடப்பட்டார்.

இரண்டு மாதங்கள் கழித்து, 2022 ஜூன் 6ஆம் தேதி துணைப் பிரதமர் பதவிக்கு அவர் உயர்த்தப்பட்டார். அப்போது முதலே அவர்தான் அடுத்த பிரதமர் என்று பரவலாகக் கணிக்கப்பட்டது.

அதற்கேற்ப, அடுத்த தேர்தலுக்குள் பிரதமர் பொறுப்பை லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்க இருப்பதாக 2023 நவம்பர் 5ஆம் தேதி பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.

அரசியலில் நுழையும் முன்னர் 14 ஆண்டு காலம் அரசாங்கப் பணிகளில் பல்வேறு பொறுப்புகளை திரு வோங் வகித்தார்.

2005ஆம் ஆண்டு பிரதமரின் முதன்மை தனிச் செயலாளராகவும் 2009ஆம் ஆண்டு எரிசக்திச் சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் திரு வோங் திறம்படப் பணியாற்றினார்.

அரசியலில் அடியெடுத்து வைத்து, 13 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து பிரதமர் பதவியில் அமர உள்ளார் அவர்.

குறிப்புச் சொற்கள்