பிரதமர் லீக்கு அமைச்சர்கள் புகழாரம்

சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகக் கடந்த 20 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்திய திரு லீ சியன் லூங், அறிவுக்கூர்மையுள்ள, நினைத்ததைச் செய்து முடிக்கும் தலைவர் என்ற புகழைப் பெற்றிருக்கிறார்.

சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர் அவர்.

பிரதமர் அலுவலம் ஏப்ரல் 15ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் லீ தமது பதவியிலிருந்து விலகி, அந்தப் பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்து, மேற்கூறப்பட்டுள்ள பற்பல புகழுரைகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாதாரண சிங்கப்பூரர்கள் எனப் பல தரப்பினரும் தங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் பிரதமர் லீக்கு தங்கள் சோகம் கலந்த பிரியாவிடைச் செய்திகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில், மே மாதம் 15ஆம் தேதியன்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கை வரவேற்கும் வாசகங்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

கொவிட்-19 பெருந்தொற்று, பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் நாட்டை வழிநடத்திய விதம், சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் தலையெடுக்கும்போது அவற்றைக் கையாண்ட திறமை போன்ற பற்பல விதங்களில் தமது தலைமைத்துவ திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய திரு லீயை, பெரும்பாலானோர் சிங்கப்பூரின் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்த ஒரு தொலைநோக்குத் தலைவராகப் பார்க்கின்றனர்.

அமைதியான அறிவாற்றல்,
நிலையான வழிகாட்டுதல்

கடந்த இருபது ஆண்டுகளில், உலகளாவிய நிதி நெருக்கடி, கொவிட்-19 பெருந்தொற்று முதல் இன்றைய நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழல் வரை சிங்கப்பூர் எதிர்நோக்கிய சிக்கலான விவகாரங்களை நினைவுகூர்ந்தார் துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஹெங் சுவீ கியட்.

“இந்த காலகட்டங்களில் பிரதமர் லீ, தன்னலமின்றி அர்ப்பணிப்புடன், அமைதியான அறிவாற்றல், நிலையான வழிகாட்டுதலுடன் தேசத்தை முன்னெடுத்துச் சென்றார்,” என்றும் திரு ஹெங் புகழாரம் சூட்டினார்.

நாட்டை வலுவாக
ஒன்றுபடுத்திய தலைவர்

உலகளாவிய நிதி நெருக்கடி காலத்தில் பிரதமர் லீ எவ்வாறு நாட்டை வலுவாக ஒன்றுபடுத்தினார் என்பதை நினைகூர்ந்தார் தொடர்பு, தகவல் அமைச்சரும் அறிவார்ந்த தேசம் மற்றும் இணைய பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ.

“தங்கள் பணிகளில் ஆர்வம் கொண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்று நமது நிபுணத்துவ குழுக்கள் அறிந்திருந்ததால், அது அவர்கள் துடிப்புடன் தங்கள் திட்டங்களில் வெற்றிபெற உதவியது. அவர்கள் செய்யும் வேலையில் உள்ள சவால்களை அறிந்து அதற்குத் தீர்வுகாணும் திட்டங்களை அறிவித்தார் திரு லீ.

“மேலும் தீவிர ஒழுக்கமுடைய நாடு சிங்கப்பூர் என்றும் தான் சந்திக்கும் எந்தப் பிரச்சினையாலும் அதற்கு அனைத்து நிலைகளிலும் தீர்வு காணும் திறனை அது பெற்றுள்ளது என்றும் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளும் முதலீட்டாளர்களும் அறிந்துள்ளனர்,” என்றும் திருவாட்டி டியோ கூறினார்.

சுற்றுப்புற விவகாரங்களில்
மிகுந்த ஆர்வம் காட்டியவர்

“பல்வேறு சுற்றுப்புற விவகாரங்களில் சிங்கப்பூர் அதன் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் பிரதமர் லீ என்று கூறினார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.

அவரது தலைமைத்துவத்தின்கீழ், தமது அமைச்சு முழுமையான, நிலையான வளர்ச்சி மாதிரியை விரிவுபடுத்திக்கொண்டது என்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் வளங்கள் மீள்தன்மை ஆகியவற்றின் உதவியோடு பொருளியல் வளர்ச்சியையும் அடைய முடிந்தது என்றார் திருவாட்டி ஃபூ.

சமூகத்தை ஒன்றிணைக்க
வலியுறுத்தியவர்

கடந்த 2013ல் தேசிய தினப் பேரணி உரையின்போது, சமூகத்தை ஒன்றிணைக்கும் தேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரதமர் லீ பேசியதை நினைவுகூர்ந்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “பல வழிகளில் அது நமது சமூகத்தையும் நாட்டையும் ஒன்றிணைக்கும் அழைப்பாகப் பார்க்கப்பட்டது. காம்கேர் நிதி, வேலைநலன், படிப்படியாக உயரும் சம்பள முறை போன்ற திட்டங்கள் அறிமுகம் கண்டன,” என்று கூறினார்.

பிரதமர் லீயின் தலைமைத்துவம் பற்றிக் கருத்துரைத்த மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், “கடந்த 20 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நாட்டை வழிநடத்திய பிரதமர் லீக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் திரு லாரன்ஸ் வோங்குக்கு எனது வாழ்த்துகள். சிங்கப்பூரின் வெற்றிகரமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம்,” என்றார்.

பிரதமர் லீயின் அமைச்சரவைக் குழுவில் ஓர் உறுப்பினராக அங்கம் வகிப்பதில் தாம் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்.

திரு லீயின் அர்ப்பணிப்பு சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் மாபெரும் ஊக்கத்தை அளித்து வந்துள்ளது என்றும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல உள்ள புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் அவரது குழுவினருக்கும் தொடர்ந்து தம்முடைய ஆதரவு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நிலையான தலைமைத்துவமும் நீண்டகாலத் திட்டமிடுதலும் சிங்கப்பூரின் மிகப்பெரிய சொத்துகளாக இருந்துவந்துள்ளன. அவற்றைப் பிரதமர் லீ தமது பதவிக்காலத்தில் வலுவாகப் பின்பற்றினார் என்று புகழாரம் சூட்டினார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!