தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கான விண்ணப்பங்கள் நியாயமான வகையில் பரிசீலிக்கப்பட வேண்டும்’

2 mins read
f35565ae-5af0-4f72-b326-9338089a2aa0
நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கு ஊழியர்கள் விண்ணப்பம் செய்ய நிறுவனங்கள் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அதுதொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட ஊழியரிடம் நிறுவனங்கள் தெரிவித்துவிட வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கு ஊழியர்கள் விண்ணப்பம் செய்யும்போது அவற்றை சிங்கப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நியாயமான வகையில் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்புப் பங்காளித்துவப் பணிக் குழு முன்வைத்த அனைத்துப் பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் தொடர்பான இந்தப் புதிய முத்தரப்புப் பங்காளித்துவ வழிகாட்டி நெறிமுறைகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டன.

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கு ஊழியர்கள் விண்ணப்பம் செய்ய நிறுவனங்கள் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அதுதொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட ஊழியரிடம் நிறுவனங்கள் தெரிவித்துவிட வேண்டும்.

நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் தொடர்பான விண்ணப்பங்களை நிராகரிக்க நிறுவனங்களுக்கு உரிமை உண்டு. இருப்பினும், அதற்கான காரணங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் இருந்தாலும் அல்லது செலவினம் அதிகமாகக்கூடும் என்று தெரியவந்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.

இந்தப் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் மிகவும் அவசியம் என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் இறுக்கமான தொழிலாளர் சந்தை, மூப்படையும் ஊழியரணி ஆகியவற்றை அவர் சுட்டினார்.

மூத்தோரைப் பராமரிக்கும் பொறுப்புகளை மேலும் பலர் ஏற்பதாக அவர் கூறினார்.

வேலையைத் தொடர விரும்பும் பராமரிப்பாளர்கள், மூத்தோர் ஆகியோருக்கு நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

இந்தப் புதிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

அவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கப்படக்கூடும் அல்லது திருத்தப் பயிலரங்குகளில் பங்கெடுக்க உத்தரவிடப்படக்கூடும் என்று அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்