லீ குவான் யூ தண்ணீர் பரிசை வென்ற டச்சுப் பேராசிரியர்

லீ குவான் யூ தண்ணீர் பரிசை வென்ற டச்சுப் பேராசிரியர்

2 mins read
கழிவுநீர்க் கண்காணிப்பின் மூலம் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தவர்
598dca7e-1988-41c9-8f05-cb77163ac361
நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியியல் வல்லுநரான பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமா, 2024ஆம் ஆண்டுக்கான லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியியல் வல்லுநரான பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமா, 2024ஆம் ஆண்டுக்கான லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசை வென்றுள்ளதாக ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவல் உலகை ஆட்டிப்படைத்த காலத்தில், கழிவுநீரைக் கண்காணிப்பதன் மூலம் அந்நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தவர் அவர்.

62 வயதாகும் அவர் நெதர்லாந்தின் கேடபிள்யூஆர் தண்ணீர் ஆய்வுக் கழகத்தின் முதன்மை நுண்ணுயிரியியலாளர்.

2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவரும் அவரது குழுவினரும் நெதர்லாந்து முழுவதும் கழிவுநீர் மாதிரிகளைச் சேகரித்து, கொவிட்-19 கிருமி காணப்படுகிறதா எனச் சோதித்தனர்.

கிருமிப் பரவல் பெரிதாகத் தலையெடுக்கத் தொடங்கிய வேளையில், முன்கூட்டியே கண்டறிதல், கண்காணித்தல் ஆகியவற்றின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

பல நகரங்களில் கிருமி பரவியதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவருவதற்கு முன்பே அக்குழுவினர், அந்த நகரங்களின் கழிவுநீரில் கொவிட்-19 கிருமியின் தடயங்களை அடையாளம் கண்டனர்.

பொதுச் சுகாதாரக் கண்காணிப்புக் கருவியாகக் கழிவுநீர்ப் பரிசோதனை முறை கடைப்பிடிக்கப்படுவதற்குப் பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமாவின் பணி அடிப்படையாக அமைந்தது.

லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசின்கீழ் அவருக்கு தெமாசெக் அறக்கட்டளையின் ஆதரவுடன் விருதுச் சான்றிதழ், தங்கப் பதக்கம், S$30,000 ரொக்கம் ஆகியவற்றை அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்குவார்.

விருது வழங்கும் விழா ஜூன் 18ஆம் தேதி நடைபெறும்.

ஜூன் 19ஆம் தேதி, சிங்கப்பூர் அனைத்துலகத் தண்ணீர் வாரம் 2024ன் ஓர் அங்கமாக பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமா முக்கிய உரை நிகழ்த்துவார்.

லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசைப் பெறும் 10வது வல்லுநர் அவர்.

உலகின் நீர்ச் சவால்களுக்குத் தீர்வுகாண உதவும் புத்தாக்கத் தொழில்நுட்பங்கள், கொள்கைகள் அல்லது திட்டங்களை உருவாக்கிய தனிநபர்கள் அல்லது அமைப்புகளை அப்பரிசு அங்கீகரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்