‘வலுவான கொள்கைகளும் கல்வியும் முக்கியம்’

‘வலுவான கொள்கைகளும் கல்வியும் முக்கியம்’

2 mins read
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் தொடர்பான சிக்கல்களைச் சமாளிப்பது குறித்து அமைச்சர் ஜோசஃபின் டியோ
610daa98-c2bb-463b-9092-ad4298366985
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ (இடம்), ஆரக்கிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சஃப்ரா கேட்ஸ். - படம்: ஆரக்கிள்

வர்த்தகங்களும் தனிநபர்களும் மின்னிலக்கமயமாவதற்கு உதவ வலுவான கொள்கைகளும் கல்வியும் அவசியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஏப்ரல் 16ஆம் தேதி கூறியுள்ளார்.

தொழில்நுட்ப மாற்றம் பெரும்பாலும் சந்தேகத்துடனே அணுகப்படும் என்பதை அவர் சுட்டினார்.

செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமைக் கட்டமைப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அன்றாட நடவடிக்கைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், இத்தொழில்நுட்பங்கள் குறித்த பொதுவான புரிதலும் இவை நம்பகமானவை என்ற உறுதியை வழங்குதலும் அவசியம் என்றார் அமைச்சர்.

‘ஆரக்கிள் கிளவுட்வேர்ல்ட்’ சுற்றுப்பயணம் எனும் தொழில்நுட்பக் கருத்தரங்கில் திருமதி டியோ உரையாற்றினார்.

சிங்கப்பூரின் பெரும்பாலான கணினிச் சேவைக் கட்டமைப்புகள் இணையத்தில் இடம்பெற வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் வலியுறுத்தி வந்ததை அவர் குறிப்பிட்டார்.

ஓர் அமைப்பின் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தரவுகளைக் கையாள மேகக் கணிமைத் தொழில்நுட்பம் வகைசெய்கிறது.

“தனியார் துறைக்கு இந்த நடைமுறையைத் தொடங்கியபோது அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டோம்.

“கூடுதலான சேவைகள் மேகக் கணிமைக்கு மாறும்போது மக்களின் நம்பகத்தைப் பெறுவதும் அதன் இணையப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதும் முக்கியம். சிங்கப்பூரின் கொள்கைகள் இந்த இலக்குகளை அடைய முனைகின்றன,” என்று திருமதி டியோ கூறினார்.

சிங்கப்பூரில் 1988 முதல் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம், இங்குள்ள ஏறத்தாழ 10,000 மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த எண்ணிக்கை குறைந்தபட்ச இலக்கு என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஃப்ரா கேட்ஸ் கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்கும் சிங்கப்பூரின் இலக்கை அடைய அந்தப் பயிற்சித் திட்டம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கல்விசெயற்கை நுண்ணறிவுஅமைச்சர்