சிங்கப்பூரின் பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில், தான்சானியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் செவ்வாய்க்கிழமை தீப்பற்றிக் கொண்டது.
அதிலிருந்து 12 சிப்பந்திகளும் மீட்கப்பட்டுவிட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
‘லயுர் அங்குன் 8’ சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீச்சம்பவம் பற்றி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.50 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்தது என்று ஆணையம் கூறியது.
‘லயுர் அங்குன் 8’ சரக்குக் கப்பல் 72 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது. கப்பலில் இருந்து மீட்கப்பட்ட சிப்பந்திகள் அனைவரும் கடலோரக் காவற்படையில் படகில் ஏற்றப்பட்டு, சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பாளர்க் குழு, ஆணையத்தின் இழுவைப் படகுகள், சுற்றுக்காவல் படகு ஆகியனவும் ஆதரவு வழங்குகின்றன.
தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரித்து வருகிறது.