தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரம் மீது பேருந்து மோதியதில் 58 வயது ஓட்டுநர் மரணம்

1 mins read
cacfd6fe-703e-432e-8c83-a9d23df9235c
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில், எஸ்எம்ஆர்டி பேருந்தின் முன் கண்ணாடி நொறுங்கி இருந்ததைக் காண முடிந்தது. - படம்: SGFOLLOWSALL.BACKUP/இன்ஸ்டகிராம்
multi-img1 of 2

உட்லண்ட்சில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) காலை எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று நடைபாதையில் ஏறி மரத்தின் மீது மோதிய விபத்தில் 58 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்எம்ஆர்டி பேருந்துகள் துணை நிர்வாக இயக்குநர் வின்செண்ட் கே, உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்தை நோக்கி உட்லண்ட்ஸ் அவென்யூ 2 வழியாக சேவை எண் 911 சென்றுகொண்டு இருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்றார் அவர்.

“எங்களுடைய பேருந்து ஓட்டுநர் மரணம் அடைந்ததை அறிந்து நாங்கள் மிகுந்த சோகத்தில் உள்ளோம். சிரமமான இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தாருக்கு ஆதரவளிப்பதே எங்களது முன்னுரிமை,” என்று திரு கே கூறினார்.

இந்த விபத்து குறித்து காலை 9.25 மணி மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அந்த ஆண் பேருந்து ஓட்டுநர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இல்லை. மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

விபத்துக்குப் பிந்தைய நிலவரத்தைக் காட்டும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் பகிரப்பட்டன. அவற்றில், எஸ்எம்ஆர்டி பேருந்தின் முன் கண்ணாடி நொறுங்கி இருந்ததைக் காண முடிந்தது.

விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்