உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஒளிக்காட்சி தயாரிக்கும் போட்டியின் இறுதிச்சுற்று

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஒளிக்காட்சி தயாரிக்கும் போட்டியின் இறுதிச்சுற்று

2 mins read
a633fc25-951e-49fd-a611-9d56a12275fd
“நிருபராக எனது பயணம்” எனும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான ஒளிக்காட்சி தயாரிக்கும் போட்டியின் இறுதிச்சுற்றும், பரிசளிப்பு விழாவும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை பத்து மணி அளவில் தி பாட், தேசிய நூலகத்தில் நடைபெற்றது. - படம்: விஜய் சங்கர்ராமு 

தமிழ்மொழி விழா 2024-ஐ முன்னிட்டு மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவற்றின் ஆதரவில் ‘இன்போனிடிக்ஸ்’ நிறுவனம் இணைந்து வழங்கிய “நிருபராக எனது பயணம்” எனும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான ஒளிக்காட்சி தயாரிக்கும் போட்டியின் இறுதிச்சுற்றும், பரிசளிப்பு விழாவும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை பத்து மணி அளவில் தி பாட், தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி மாணவர்களுக்கான பயிலரங்கு நடத்தப்பட்டது. பயிலரங்கில் 28 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஊடகத் துறையில் அனுபவம் பெற்றவரும் தேசியப் பல்கலைக்கழக மாணவியுமான செல்வி விஷ்ணு வர்தினியும், மீடியாகார்ப் செய்தியில் மின்னிலக்கப் பிரிவில் நிருபராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய திரு.நித்திஷ் செந்தூரும் பயிலரங்கை வழிநடத்தினர்.

செய்தி என்றால் அதில் என்னென்ன கூறுகள் இருக்க வேண்டும், அதில் நிருபரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும், ஒரு செய்திக் காணொளியைத் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய தொழில்நுட்ப உத்திகள் பற்றியும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிலரங்கின் தொடர்ச்சியாக மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல், மின்னிலக்கப் பயன்பாடு, தொண்டூழியம், தமிழ்ப் பண்பாடு என நான்கு கருப்பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் ஏதேனும் ஒரு கருவை மையமாகக் கொண்டு 2 நிமிடங்களுக்குள் செய்திக் காணொளியைத் தயாரித்து முதல் சுற்றுக்கு அனுப்பவேண்டும். செய்திக் காணொளிகளை அனுப்பிய 25 பள்ளிகளிலிருந்து 11 பள்ளிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

முதல் சுற்றுக்கு நடுவர்களாக மீடியாகார்ப் செய்தியின் மின்னிலக்கப் பிரிவு தயாரிப்பாளரான திரு.இம்ரானும், பயிலரங்கை நடத்திய திரு.நித்திஷ் செந்தூரும் மாணவர்களின் செய்திக் காணொளிகளைத் தேர்வு செய்தனர். இவர்களுடன் இணைந்து 15 ஆண்டுகாலச் செய்தி வாசிப்பு அனுபவம் கொண்டவரும், 2003, 2016ஆம் ஆண்டுகளில் தமிழ் முரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றவருமான தமிழ் ஆசிரியர் திரு.ஜெகதீசன் இறுதிச் சுற்றில் தலைமை நடுவராக இருந்தார்.

தேர்வு செய்யப்பட்ட 11 செய்திக் காணொளிகளும் திரையிடப்பட்டு அதைத் தயாரித்த மாணவர்களிடம் காணொளி உருவான விதம், கருப்பொருள், தொழில்நுட்பம் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பேசிய திரு.ஜெகதீசன், மாணவர்களின் ஆர்வத்தையும் திறமையையும் பாராட்டியதோடு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ‘இன்போனிடிக்ஸ்’ நிறுவனத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அதோடு, மேலும் வாய்ப்பு கிடைத்தால் இது போன்ற ஒரு போட்டியைத் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு. ஜோதிமாணிக்கம் பேசுகையில், மாணவர்களின் தமிழ்ப்பற்றும் திறமையும் மகிழ்வைத் தருவதாகக் கூறினார்.

‘இன்போனிடிக்ஸ்’ நிறுவனத்தின் துணை இயக்குநர் திருமதி.ஜெயந்தி வரவேற்புரையையும், நிர்வாக இயக்குநர் சுபா செந்தில்குமார் நன்றியுரையையும் வழங்கினர். பல நிகழ்வுகளைத் தொகுத்து அளித்த அனுபவம் உள்ள மருத்துவரும், தமிழ் ஆர்வலருமான திரு சரவணன் நிகழ்வை உயிர்ப்புடன் வழிநடத்தினார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தி: வினோத்   

குறிப்புச் சொற்கள்