ஸ்வைபர் நிறுவனருக்கு $100,000 அபராதம்

ஸ்வைபர் நிறுவனருக்கு $100,000 அபராதம்

1 mins read
073a0203-bb2c-42d0-bf5a-8fdb708f4dff
நொடித்துப்போன ஸ்வைபர் நிறுவனம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நொடித்துப்போன ஸ்வைபர் எனும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ரேமண்ட் கோவுக்கு 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் திட்டம் ஒன்றின் தொடர்பில் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பொய் அறிவிப்பை மேற்கொண்டதற்கான குற்றச்சாட்டையொட்டி அந்த அபராதம் விதிக்கப்பட்டது. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான தகவல்களை வெளியிடாததன் தொடர்பிலான குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டது.

தன் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டை 56 வயது கோ ஒப்புக்கொண்டார். இம்மாதம் 24ஆம் தேதிக்குள் அபராதத் தொகையான 100,000 வெள்ளியைச் செலுத்தாவிட்டால் அவர் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படக்கூடும்.

கோ மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு எஸ்எஃப்ஏ எனப்படும் முதலீடு சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவு 199க்குக்கீழ் பதிவானது.

மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு திட்டத்துக்காக 710 மில்லியன் டாலர் (966.94 மில்லியன் வெள்ளி) நிதி பெற்றதாக ஸ்வைபர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. அதன் தொடர்பில் கோ மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அத்திட்டம், ஸ்வைபர் அடுத்த கட்டத்தில் அடியெடுத்துவைப்பதைச் சித்திரிப்பதாக ஸ்வைபரின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான ஃபிரான்சிஸ் வோங் அறிவிப்பில் குறிப்பிட்டார்.

அந்த அறிவிப்பு பொய்யானது என்று பின்னர் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஸ்வைபரின் மூத்த நிர்வாகக் குழுவின் மூலம் அந்த விவரம் தெரியவந்தது.

ஸ்வைபருக்குச் சொந்தமான ஸ்வைபர் ஆஃப்‌ஷோர் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், சம்பந்தப்பட்ட திட்டத்துக்கு இரண்டு மில்லியன் டாலர் வரை செலவிடுவதற்கான ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்